அயோத்தி ராமர் கோவில் விழா புறக்கணிப்பு; காங்கிரஸின் அறிவிப்புக்கு எதிராக ஒன்று திரண்ட பாஜக தலைவர்கள்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளவில்லை என காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்த பின் பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோவில்
அயோத்தி ராமர் கோவில்pt web

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதனை ஒட்டி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. 6000 பேர் அங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் சூழலில், பல்லாயிரக்கணக்கான துறவிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களும் லட்சக்கணக்கில் அயோத்தியில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளனர். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், “ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க கடந்த மாதம் அழைப்பிதழ் கிடைத்தது. மதம் என்பது தனிநபர் விவகாரம். அதை அரசியல் திட்டமாக அயோத்தியில் ராமர் கோயிலை பாஜகவினர் கட்டி வருகின்றனர். மேலும், கட்டிமுடிக்கப்படாத கோயிலை அரசியல் லாபத்துக்காக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் திறக்க இருக்கின்றனர். பல லட்சக்கணக்கான மக்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ராமர் கோயில் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதை மரியாதையுடன் புறக்கணிக்கிறோம்” என தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் தலைவர்களின் முடிவுக்கு பாஜக கடும் எதிர்ப்பினை பதிவு செய்தது. காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து இந்துக்களையும் சனாதன தர்மத்தையும் விமர்சித்து வருவதாக குற்றம் சாட்டினர்.

காங்கிரஸின் முடிவை கடுமையாக விமர்சனம் செய்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சவுஹான், “இவர்கள் சீசனல் ஹிந்துக்கள். வாக்குகளை பெற வேண்டும் என நினைக்கும் நேரங்களில் மென்மையான இந்துக்களாக மாற நினைக்கின்றனர். ராமர் எங்கள் இறைவன். அவர் பாரதத்தின் ஆன்மாவையும் அடையாளத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். கும்பாபிஷேக அழைப்பை காங்கிரஸ் நிராகரித்தது இந்தியாவின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் நிராகரித்ததாகும். இதுபோன்ற நிலைப்பாடுகளால்தான் காங்கிரஸ் ஓரம் கட்டப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்திருந்தார்.

பாஜகவின் எம்.பி. சுதான்ஷூ திரிவேதி இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “காங்கிரஸ் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா, ஜி20 உச்சி மாநாடு போன்றவற்றையும் புறக்கணித்தது. 2004 முதல் 2008 வரை கார்கில் விஜய் திவாஸையும் புறக்கணித்த காங்கிரஸ், 1998 ஆம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சியில் பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பிறகு பத்து நாட்களுக்கு எந்த கருத்தையும் வெளியிடவில்லை” என்றும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கருத்துக்கும் பாஜகவின் எதிர்ப்பு குறித்தும் கருத்து தெரிவித்துள்ள உத்தவ் அணியின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, “ராமர் நம் இதயம், மதம், நம்பிக்கை, முடிவுகள், செயல்கள் என அனைத்திலும் இருக்கிறார். அதில் எந்த அரசியலும் இல்லை. யார் அரசியல் செய்கிறார்கள் என்பது தான் கேள்வி” என தெரிவித்திருந்தார்.

பாஜகவின் விமர்சனங்களுக்கு கருத்து தெரிவிக்கும் காங்கிரஸ் தலைவர்கள் பாஜக அனைத்திலும் அரசியல் செய்கிறது என்றே விமர்சிக்கின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, "எங்கள் கட்சியினர் எடுத்த முடிவு சரியானது. ஜாதி, மதம், கட்சி வேறுபாடின்றி நடத்த வேண்டிய மத நிகழ்வை அரசியலாக்குவதன் மூலம் ராமரையும், நாட்டின் 140 கோடி மக்களையும் பிரதமரும் சங்பரிவார தலைவர்களும் அவமதிக்கின்றனர்” என தெரிவித்தார்.

சித்தராமையா
சித்தராமையாANI twitter page

ராமர் கோவில் பிரதிஷ்ட விழாவில் கலந்துகொள்வது குறித்த பேச்சுக்கள் இருந்த நிலையில், கலந்துகொள்ளாதவர்கள் குறித்த பேச்சுக்கள் சமீபத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சியும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் இந்த நிகழ்வையொட்டி நடப்பதை ஒரு தேர்தல் பரப்புரை என்று கடுமையாக விமர்சித்து இருந்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com