ஜன.15 மும்பை மாநகராட்சி தேர்தல்.. கவனம் பெறும் தமிழர்கள் வாக்குகள்!
மும்பை மாநகராட்சி தேர்தல் வரும்15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழர்களின் பங்களிப்பு குறித்து தற்போது பார்க்கலாம்...
மும்பை மாநகராட்சி தேர்தல் என்பது ஏறக்குறைய ஒரு மினி சட்டமன்றத் தேர்தல் போன்றது. பல்வேறு மொழியினர், சமூகத்தினர், மதத்தினர் என பன்முகத் தன்மை கொண்ட வாக்காளர்களின் பங்களிப்புடன் இத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் 12லட்சம் தமிழர்களின் வாக்குகள் முக்கியp பங்களிக்கிறது. பல்வேறு வார்டுகளில் கடும் இழுபறி நீடிக்கும் நிலையில் தமிழர்களின் வாக்குகள் அங்கு வெற்றியாளர்களை முடிவு செய்யும் நிலை உள்ளது. குறிப்பாக தாராவி, சியான் கோலிவாடா போன்ற பகுதிகளில் தமிழர்கள் ஆதரவின்றி எக்கட்சியும் வெல்ல முடியாத நிலை உள்ளது. இதுதவிர செம்பூர், அந்தேரி, பாண்டுப், குர்லா, மலாட் போன்ற பகுதிகளிலும் தமிழர்கள் வாக்குகள் கவனம் பெறுகின்றன. குறைந்தது 12% முதல் அதிகபட்சம் 25% வரை ஒவ்வொரு வார்டிலும் தமிழர்கள் வாக்குகள் உள்ளன. மொத்தமுள்ள 227 வார்டுகளில் 35 வார்டுகளில் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் வாக்குகள் உள்ளன.
இதைக் கருத்தில்கொண்டு தமிழர்களையே சில கட்சிகள் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன. தமிழர்களை வாக்கு வங்கியாக மட்டும் பார்க்கும் நிலை மாறி அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை போன்ற தமிழக பாஜக தலைவர்களை அழைத்து வந்து பாஜக பரப்புரை செய்யும் நிலையில் தங்கள் பாரம்பரிய வாக்கு வங்கியான தமிழர்கள் வாக்குகள் சிதறாமல் பெற காங்கிரஸ் காய் நகர்த்துகிறது. தாராவி மறுசீரமைப்பு திட்டம், கல்வி, குடிநீர், கழிவுநீர் அகற்று வசதி, தமிழ்வழிக் கல்வி தொடருதல் போன்ற கோரிக்கைகளே மும்பை தமிழர்களின் பிரதான தேர்தல் எதிர்பார்ப்புகளாக உள்ளன. மண்ணின் மைந்தர்களான மராத்திகள், வட இந்தியர்கள் என இரு களங்களை கொண்டதாக மும்பை தேர்தல் உள்ள நிலையில் அதில் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்கள் வாக்குகள் முக்கியத்துவம் பெறுவது இத்தேர்தலை கவனம் ஈர்ப்பதாக மாற்றியுள்ளது.

