இன்று வானத்தில் நிகழப்போகும் அதிசயம்.. அது என்ன Blood Moon?
எண்ணிலடங்கா பிரமிப்புகளை தன்னுள் மறைத்து வைத்திருக்கிறது பிரபஞ்சம். அது நிகழ்த்தும் அதிசயங்களில் ஒன்று, இன்று நள்ளிரவு வானில் தோன்ற உள்ளது. அதுதான் நீளமான சந்திர கிரகணம். இது இந்தியாவில் மிகத்தெளிவாக பார்க்கக் கூடியதாக இருக்கும். இந்த நிகழ்வின்போது, சந்திரன், பூமியின் நிழல் பட்டு Blood Moon-ஆக காட்சியளிக்கும் என கூறுகிறது அறிவியல் உலகம்.
சூரியன், பூமி மற்றும் சந்திரனின் நகர்வைப் பொறுத்தே சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்கின்றன. சந்திர கிரகணம் என்பது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி வரும் போது, சூரியனின் ஒளி நிலவை அடையாமல் தடுக்கும் வானியல் நிகழ்வே ஆகும். பூமி, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே மாதம் ஒரு முறை வருகிறது. ஆனால், 5 டிகிரி கோணத்தில் சந்திரனின் சுற்றுவட்டப்பாதை அமைந்திருப்பதால் அது பௌர்ணமியாக மட்டுமே நிகழ்கிறது. அதே நேரத்தில், ஆண்டுக்கு 2 அல்லது 3 முறை சந்திரன் - பூமி – சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருவதால், பூமியின் நிழல் சந்திரனில்பட்டு சந்திர கிரகணமாக காட்சி தருகிறது.
ஆனால், இன்று நள்ளிரவு 11 மணிக்கு முழுமையான மற்றும் நீண்ட நேரம் தோன்றும் சந்திர கிரகணம், இந்தியாவில் நிகழ உள்ளதாக சர்வதேச வானியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. நள்ளிரவு 11 மணிக்கு தொடங்கி, 12:22 வரை மொத்தம் 82 நிமிடங்கள், சிவப்பு வண்ணத்தில் காட்சி அளிக்க காத்திருக்கிறது சந்திரன். பூமியின் வளிமண்டலத்தில் இருந்து சிதறிய சூரிய ஒளி, சந்திரனைத் தாக்கும். நீல ஒளி அதிகமாக சிதறுவதால் சிவப்பு ஒளி அதிகமாகச் சந்திரனை அடையும். இதனால் சந்திரன் சிவப்பு நிறத்தில் தெரியும். இதுவே “ப்ளட்மூன்” என அழைக்கப்பட காரணம்.