பெரும்பான்மைக்கு இன்னும் 6 எம்பிக்கள்தான்.. 'மிஷன் 360' திட்டத்தைத் தீவிரப்படுத்தும் பாஜக!
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது. இக்கூட்டத்தொடரில், அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதாவை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கெனவே, கடந்த ஏப்ரல் மாதம் தொகுதி மறுவரையறை மசோதா, அரசியலமைப்பு 131வது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்தது. ஆனால், அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் நிறைவேற வேண்டும் என்றால் மொத்தமுள்ள 3-இல் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும் என்ற சூழலில், தொகுதி மறுவரையறை மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த மசோதாவுக்கு ஆதரவாக 278 வாக்குகளும், எதிராக 211 வாக்குகளும் பதிவாகிய நிலையில், 3-இல் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற தவறியதால் இந்த மசோதா தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் மக்களவைத் தொகுதி எல்லை நிர்ணயம் ஆகிய இரண்டையும் இணைக்கும் அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதாவை மீண்டும் கொண்டுவருவதற்காக, பாஜக அரசு தனது 'மிஷன் 360' திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்புக் கூட்டத்தொடரின் போது, இந்த மசோதா தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறத் தவறியதால், ஆளும் கூட்டணி தற்போது அதற்காக பிற கட்சிகளின் ஆதரவை நாடி வருகிறது. இதற்கு வடக்கில் அணி மாறிய அல்லது அதிருப்தி எம்பிக்களின் ஆதரவை பாஜக கோரியுள்ளது. இதற்கிடையே, அரசியலமைப்புத் திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) இன்னும் சுமார் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களே குறைவாக இருப்பதாக நம்பப்படுகிறது.
மூன்று இடங்கள் காலியாக உள்ளதை அடுத்து, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 540 ஆக உள்ளது. ஒரு அரசியலமைப்புத் திருத்தத்திற்கு குறைந்தபட்சம் 360 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அரசியல் வட்டாரங்களின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தற்போது சுமார் 293 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. திரிணாமூல் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால், இந்த எண்ணிக்கை சுமார் 335 ஆக உயரக்கூடும்.
தவிர 4 ஒய்.எஸ்.ஆர்.சி.பி. எம்.பி.க்கள் மற்றும் ஒரு சுயேச்சை எம்.பி.யின் ஆதரவை இந்தக் கூட்டணி பெற்றுள்ளதால், இது 340 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) அணியிலிருந்து ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏக்நாத் அணியில் உள்ளனர். இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், 346 ஆக பலம் உயருகிறது. இது தவிர, எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சரத் பவாரின் கட்சி, பாஜகவுக்கு ஆதரவளிக்கும் எனத் தெரிகிறாது. ஆகையால், பாஜக கூட்டணியின் பலம் ஏறத்தாழ 354 ஆக உயரக்கூடும்.
இதன்மூலம், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கு கூட்டணிக்கு இன்னும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தேவைப்படும் எனத் தெரிகிறது. தற்போது காங்கிரஸ் - திமுக இடையே உறவு விரிசல் அடைந்திருப்பதால், திமுக நாடாளுமன்றக் குழுவும், சில பிரச்னைகளில் அரசுக்கு ஆதரவளிக்கக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தற்போதைய அரசியல் சூழல் முன்பைவிட வலுவாகவும், சாதகமாகவும் இருப்பதாக அரசாங்கம் நம்புவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

