5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்.. பாஜக செலவழித்தது இத்தனை கோடியா? வெளியான அதிர்ச்சித் தகவல்!!
2026 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 5 மாநிலங்களில் பாஜக, ரூ.529 கோடிக்கும் அதிகமாக தேர்தல் செலவு செய்துள்ளதாக, அக்கட்சி தாக்கல் செய்துள்ள தேர்தல் செலவுக் கணக்குகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களிலும் பாஜக செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த தேர்தல் செலவு ரூ.529 கோடியே 39 லட்சம். இதில், மேற்குவங்கத்தில்தான் பாஜக அதிகபட்சமாக ரூ.286 கோடியே 99 லட்சம் செலவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது 5 மாநிலங்களிலும் பாஜக செய்த மொத்த செலவில் பாதிக்கும் அதிகமாகும்.
மேற்குவங்கத்தில் காங்கிரஸ் தாக்கல் செய்த கணக்கில் ரூ.27 கோடியே 65 லட்சம் செலவு குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இரு கட்சிகளின் கணக்குகளுக்கு இடையே சுமார் ரூ.259 கோடி வித்தியாசம் உள்ளது. அசாமில் பாஜக ரூ.96 கோடியே 27 லட்சமும், காங்கிரஸ் ரூ.30 கோடியும் செலவு செய்ததாகக் கணக்குகள் தெரிவிக்கின்றன. கேரளாவில் பாஜக ரூ.82 கோடியே 67 லட்சமும், காங்கிரஸ் ரூ.27 கோடியே 67 லட்சமும் செலவு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் இந்த நிலை மாறுபட்டுள்ளது. இங்கு பாஜக ரூ.51 கோடியே 56 லட்சம் செலவு செய்ததாகக் கணக்கு தாக்கல் செய்துள்ளது. அதேநேரத்தில், திமுகவின் கணக்கில் தமிழ்நாட்டுக்கான செலவாக ரூ.193 கோடியே 70 லட்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பாஜக ரூ.11 கோடியே 90 லட்சமும், திமுக ரூ.1 கோடியே 95 லட்சமும் செலவு செய்ததாகக் கணக்குகள் தெரிவிக்கின்றன.
5 மாநிலங்களின் கணக்குகளை ஒப்பிடும்போது, பாஜகவின் மொத்த செலவு ரூ.529 கோடியே 39 லட்சமாகவும், திமுகவின் செலவு ரூ.197 கோடியே 85 லட்சமாகவும், அதிமுகவின் செலவு ரூ.112 கோடியே 40 லட்சமாகவும், காங்கிரஸின் செலவு ரூ.95 கோடியே 52 லட்சமாகவும் உள்ளது.
“தேர்தல் செலவில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, தேர்தலுக்குப் பிறகு அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் செலவுக் கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை, தேர்தல் முடிந்த 75 நாட்களுக்குள் இந்தக் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்பது குறிப்பிடத்தக்கது.

