"மற்றவர்கள் பசியாறுவதை பாஜகவினால் சகித்துக்கொள்ள முடியவில்லை" - அகிலேஷ் யாதவ்!
மத்திய பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றுவது என்ற பெயரில் அத்திட்டத்தை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில், "பாஜக அரசு ஒருபுறம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான பட்ஜெட்டை குறைத்துக்கொண்டே வருகிறது. ஜிஎஸ்டி முறையினால் மத்திய அரசிடமிருந்து உரிய நிதி கிடைக்காமல் மாநிலங்களின் கருவூலம் ஏற்கனவே காலியாக உள்ளது. இந்நிலையில், இத்திட்டத்திற்கான கூடுதல் நிதியை மாநிலங்களே ஏற்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பது, மாநிலங்களே இத்திட்டத்தை கைவிடும் நிலையை உருவாக்கும் முயற்சியாகும்.
நூற்றுக்கணக்கான கிராம சபைகளை 'நகர்ப்புறப் பிரிவின்' கீழ் கொண்டு வந்ததன் மூலம், அந்தப் பகுதிகளுக்கான பட்ஜெட்டை பாஜக அரசு குறைத்திருக்கிறது. உண்மையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றுவது என்பது வெறும் கண்துடைப்புதான். இத்திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே பாஜகவின் உண்மையான இலக்கு. தங்களைத் தவிர மற்றவர்களின் பசியாறுவதை பாஜகவினால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இன்று ஏழை மக்கள் 'எங்களுக்கு பாஜக வேண்டாம்' என்று சொல்கிறார்கள்" என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

