பாஜக தலைவராக பதவியேற்ற முதல் நாள் | திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுத்த நிதின் நபின்!
பாரதிய ஜனதா தேசிய தலைவராக பொறுப்பேற்ற பின் பேசிய நிதின் நபின், ”திருப்பரங்குன்றம் மலைக் குன்று மீது தீபம் ஏற்றுவதை தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள் அண்மையில் முயற்சி செய்ததை நாம் பார்த்தோம்” என நிதின் நபின் குறிப்பிட்டார்.
பாஜகவின் தேசியத் தலைவராக கடந்த 2020 ஆண்டு முதல் இருந்த ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் 2023 ஆண்டே முடிவடைந்தது. ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, தேசிய செயல் தலைவராக பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் சின்ஹா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியில் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையில், பாஜகவின் புதிய தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், நிதின் நபின் சார்பில் மட்டும் பாஜகவின் தேசியத் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பதவிக்கு வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் நிதின் நபின் பாஜகவின் தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, இன்று டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமையகத்தில் நடந்த விழாவில் பாஜகவின் 12-வது தேசியத் தலைவராக நிதின் நபின் பதவியேற்றுக் கொண்டார். இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில், பாரதிய ஜனதா தேசிய தலைவராக பொறுப்பேற்ற பின் பேசிய நிதின் நபின், திருப்பரங்குன்றம் விவகாரத்தைக் கையில் எடுத்தார். அவர், ”திருப்பரங்குன்றம் மலைக் குன்று மீது தீபம் ஏற்றுவதை தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள் அண்மையில் முயற்சி செய்ததை நாம் பார்த்தோம். இதுபோன்ற நிகழ்வு நடைபெறுவது இது முதல்முறையல்ல. நமது பாரம்பரியத்திற்கு எதிராக பல முயற்சிகள் முன்பே நடந்துள்ளன. தீபம்ஏற்ற உத்தரவிட்ட நீதிபதியை தகுதி நீக்கவும் முயற்சி நடந்தது. இது அவர்களின் திரிபடைந்த மனநிலையை காட்டுகிறது” எனக் குறிப்பிட்டார்.

