12-வது பாஜக தேசியத் தலைவர்.. ”இனி நிதின் நபின் தான் என்னுடைய பாஸ்” - பிரதமர் மோடி!
பாஜகவின் தேசியத் தலைவராக கடந்த 2020 ஆண்டு முதல் இருந்த, ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் 2023 ஆண்டே முடிவடைந்தது. ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அவரது பதவிக்காலம் நீடிக்கபட்டிருந்தது. இந்தநிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையில், நேற்று பாஜகவின் புதிய தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நிதின் நபின் சார்பில் பாஜகவின் தேசியத் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், அப்பதவிக்கு வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் நிதின் நபின் பாஜகவின் தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, இன்று டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமையகத்தில் நடந்த விழாவில் பாஜகவின் 12-வது தேசியத் தலைவராக நிதின் நபின் பதவியேற்றுக் கொண்டார். இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நிதின் நபின் பாஜகவின் தேசிய தலைவராக பொறுப்பேற்று இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, நிதின் நபினிம் பாஜக தேசியத் தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி நிதின் நபின் குறித்துப் பாராட்டிப் பேசினார். அப்போது, ”இன்று முதல் நிதின் நபின் தான் என்னுடைய பாஸ் என்று நகைச்சுவையாகவும், அதே சமயம் கட்சியின் அதிகாரப் படிநிலைக்கு மதிப்பளிக்கும் வகையிலும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, நிதின் நபினை ஒரு "மில்லினியல்" தலைவர் என்று வர்ணித்த பிரதமர், அவர் சிறுவயதில் வானொலியில் செய்திகளைக் கேட்ட தலைமுறைக்கும், இன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தலைமுறைக்கும் இடையே ஒரு பாலமாகத் திகழ்வதாகப் பாராட்டினார். மேலும், பாஜக தனது 75-வது ஆண்டை நோக்கிப் பயணிக்கும் வேளையில், நிதின் நபினின் இளமைத் துடிப்பும், அவரது அரசியல் அனுபவமும் கட்சிக்குப் புதிய உத்வேகத்தைத் தரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜக தேசியத்தலைவர்கள் பட்டியல்
பாஜகவின் 12-வது தேசியத் தலைவராக நிதின் நபின் பதவேற்றுள்ள நிலையில், இதுவரை பாஜக தேசியத் தலைவராக இருந்தவர்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
அடல் பிஹாரி வாஜ்பாய் 1980-1986
லால் கிருஷ்ண அத்வானி 1986-1991 / 1993-1998 / 2004-2005
முரளி மனோகர் ஜோஷி 1991-1993
குஷாபாவ் தாக்ரே 1998-2000
பங்காரு லட்சுமண் 2000-2001
ஜனா கிருஷ்ணமூர்த்தி 2001-2002
வெங்கையா நாயுடு 2002-2004
ராஜ்நாத் சிங் 2005-2009, 2013-2014
நிதின் கட்கரி 2009-2013
அமித் ஷா 2014-2020
ஜே.பி.நட்டா 2020-2026

