புனே கோட்டையில் தொழுகை நடத்திய பெண்கள்.. பசு கோமியத்தால் சுத்தம் செய்த பாஜக எம்பி!
புனேயின் சனிவார் வாடா கோட்டையில், தொழுகை நடத்திய பெண்களை பாஜக எம்பி மேதா குல்கர்னி கண்டித்துள்ளார்.
மராட்டியப் பேரரசின் அடையாளமாக புனேயின் சனிவார் வாடா கோட்டை விளங்குகிறது. இந்தக் கோட்டையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் நமாஸ் செய்துள்ளனர். இதைக் கண்டித்த பாஜக எம்பி மேதா குல்கர்னி தலைமையிலான இந்து அமைப்புகள், நமாஸ் செய்த அந்த இடத்தை 'கௌமுத்ரா' (பசு சிறுநீர்) கொண்டு சுத்தம் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாவதுடன் விமர்சனங்களையும் பெற்றுள்ளது. மறுபுறம், இந்திய தொல்பொருள் ஆய்வு (ASI) அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டையில் தொழுகை நடத்திய அடையாளம் தெரியாத பெண்கள் குழு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோட்டையிலும் காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
இதுகுறித்து மேதா குல்கர்னி, “இது துரதிர்ஷ்டவசமானது. சனிவார் வாடா நமாஸ் செய்ய ஏற்ற இடம் அல்ல. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு நிர்வாகத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். சனிவார்வாடாவில் சிவ வந்தனம் செய்து அந்த இடத்தை சுத்திகரித்து உள்ளோம். இந்த மக்கள் எந்த இடத்திலும் நமாஸ் செய்து, பின்னர் அதை வக்ஃப் சொத்தில் சேர்க்கிறார்கள். இதனாலேயே இந்து சமூகம் விழிப்புடன் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானேவும் இதைக் கண்டித்துள்ளார். "ஷனிவர்வாடாவுக்கு என ஒரு வரலாறு உண்டு. அது, துணிச்சலின் சின்னம். ஷனிவர்வாடா இந்து சமூகத்திற்கு நெருக்கமானது. ஹாஜி அலியில் இந்துக்கள் ஹனுமான் சாலிசாவை ஓதினால், முஸ்லிம்களின் உணர்வுகள் புண்படாதா? மசூதிக்குச் சென்று தொழுகை நடத்துங்கள்” என அறிவுரை வழங்கியுள்ளார்.
ஆனால், இச்செயல் எதிர்க்கட்சிகளிடம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது, அஜித் பவாரின் என்.சி.பி. செய்தித் தொடர்பாளர் ரூபாலி பாட்டீல் தோம்ப்ரே, "புனேவில் இரு சமூகங்களும் ஒற்றுமையாக வாழும் அதேவேளையில், இந்து vs முஸ்லிம் என்ற பிரச்னையை எழுப்பப்படுகிறது" என விமர்சித்துள்ளார். அதேபோல், AIMIM செய்தித் தொடர்பாளர் வாரிஸ் பதான், பாஜக இந்தியாவின் மதச்சார்பின்மை மற்றும் பன்மைத்துவத்தை அழிப்பதாக குற்றம்சாட்டினார். அவர், “அவர்கள் வெறுப்பை மட்டுமே பரப்புகிறார்கள். ஜும்மாவின்போது ஒரே இடத்தில் 3-4 முஸ்லிம் பெண்கள் தொழுகை நடத்தினால், அது என்ன பிரச்னையை ஏற்படுத்தியது? ரயில்களிலோ அல்லது விமான நிலையங்களிலோ இந்துக்கள் கர்பா செய்யும்போது நாங்கள் ஒருபோதும் ஆட்சேபிக்கவில்லை. ASIயால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் அனைவருக்கும். 3 நிமிட தொழுகை உங்களை மிகவும் தொந்தரவு செய்தது. ஆனால் அரசியலமைப்பின் பிரிவு 25 மத சுதந்திரத்திற்கான உரிமையை வழங்குகிறது. எனவே, நீங்கள் எவ்வளவு வெறுப்பைப் பரப்புவீர்கள்? வெறுப்பை வளர்க்கும் உங்கள் மனதை, தூய்மைப்படுத்த வேண்டும்," என்றார்.