பாஜகவில் கடைபிடிக்கப்படும் வயது வரம்பு: பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு விலக்கு?

75 வயதுக்கு பிறகு "மார்க்தர்ஷன் மண்டல்" என அழைக்கப்படும் வழிகாட்டுதல் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜநாத் சிங் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்படுமா?
பாஜக வயதுவரம்பு
பாஜக வயதுவரம்புமுகநூல்

எல்.கே.அத்வானி உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் 75 வயதுக்கு பிறகு "மார்க்தர்ஷன் மண்டல்" என அழைக்கப்படும் வழிகாட்டுதல் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜநாத் சிங் ஆகியோருக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு தற்போது 73 வயதாகிறது. ஆகவே மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று அவர் மீண்டும் பிரதமர் ஆகவுள்ள நிலையில், மோடி 78 வயது வரை பதவியில் நீடிக்கலாம். ஆகவே எல் கே அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி போல அவர் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படாமல், பிரதமராக அவரே தொடரலாம் என பாஜக தனது நிலைப்பாட்டில் மாறுதலை செய்துள்ளதாக கருதப்படுகிறது.

பிரதமர் மோடியின் பெயரிலேயே பாஜக நாடு முழுவதும் வாக்குகளை சேகரிக்கிறது எனவும் அவர் தலைமை பொறுப்பை ஏற்ற நிலையில்தான் கட்சி தொடர்ந்து பல்வேறு தேர்தல்களில் வெற்றிவாகை சூடி வருகிறது எனவும் பாஜக தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆகவே அவருக்கு 75 வயது விதியிலிருந்து விலக்கு கட்டாயம் என கருதப்படுகிறது.

அதே சமயத்தில் பல தலைவர்கள் மோடி வழிகாட்டுதல் குழுவுக்கு செல்ல வேண்டும் என விரும்பினால், அவர் தனது முழு பதவிக்காலம் வரை நீடிக்காமல் பாதியிலேயே வேறு ஒரு பிரதமரை நியமிக்கலாம் எனவும் குறிப்பிடுகின்றனர். ஆனால் இது குறித்து தேர்தல் நடைபெற உள்ள இந்த சூழலில் எந்த விவாதத்துக்கும் இடம் இல்லை என்பதில் பாஜக தலைவர்கள் தெளிவாக உள்ளனர்.

பாஜக வயதுவரம்பு
தீவிர பிரசாரம் To எதிர்கட்சியினரை இழுப்பது |பாஜகவின் வெற்றிகள் சாத்தியமாவது எப்படி? - Top 10 Points

நரேந்திர மோடி மட்டுமல்லாது, பாதுகாப்பு துறை அமைச்சரான ராஜநாத் சிங்கும் தற்போது எழுவது வயதை கடந்தாலும் மீண்டும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 72 வயதாகும் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது. அவர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அமைச்சரானால் 77 வயது வரை பதவியில் தொடரலாம். இதை பிற பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற கேள்வியும் மோடி மற்றும் ராஜ்நாத் சிங் தேர்வு காரணமாக எழுந்துள்ளது.

முன்பு கல்ராஜ் மிஸ்ரா போன்ற மத்திய அமைச்சர்கள் 75 வயதான நிலையில் பதவியில் இருந்து விலகியதை பாஜகவினர் குறிப்பிட்டனர். அதேபோல கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூயுரப்பா 75 வயதை கடந்ததால் பதவியில் இருந்து விலக வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டது. குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் பட்டேல் இதேபோல பல பதவியில் இருந்து விலகி பின்னர் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

பாஜகவின் முதல் மக்களவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் மட்டுமே வெளிவந்துள்ள நிலையில், அடுத்த பட்டியல்களில் இதே போல எழுவது வயதை கடந்த தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com