நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. கட்சிகளுக்குள் கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் பங்கு பிரிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக மத்தியில் ஆளும் பாஜக, மார்ச் 2ஆம் தேதி 195 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
இந்த நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என சில ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனினும், தேர்தலுக்குப் பிந்தைய வெற்றியே அதை உறுதிசெய்யும். பாஜகவின் வெற்றி தோல்வி குறித்து பலரும் பேசப்படும் நிலையில், அக்கட்சியின் பலம், பலவீனம் குறித்து இங்கு அலசுவோம்.
1. பிரதமர் மோடியே முன்னிலைப்படுத்தப்படுவதுதான், பாஜக நாடு முழுவதும் பெயர் பெறுவதற்கு முக்கியக் காரணம். பொதுவாக, மாநிலக் கட்சிகள் தம் கட்சியின் தலைவரையும், அந்தந்த மாநில முதல்வரின் பெயரையும், திட்டங்களையும் முன்னிறுத்துகின்றன. ஆனால், தேசிய அளவில் பாஜக, மோடியின் பெயரையும் மத்திய அரசின் திட்டங்களையும் முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் குடியரசுத் தலைவர் தேர்தலைப்போலவே பாஜக, பிரதமர் நரேந்திர மோடியை முன்னிறுத்தி மக்களவைத் தேர்தலைச் சந்திக்கிறது. இது அக்கட்சிக்கு பெரிய அசுரபலமாக உள்ளது.
2. அடுத்து இந்தியாவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் சக்தி வாய்ந்த ஓர் ஆளுமைமிக்க தலைவராகப் பிரதமர் நரேந்திர மோடி அறியப்படுகிறார். பொதுவாக, மாநிலங்களுக்குச் செல்லும்போது தொடர்ந்து பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறார், அவர்களைக் கவரவைக்கிறார். குறிப்பாக, அயோத்தியில் பிரம்மாண்டமாய் ராமர் கோயில் கட்டி வைத்து இந்து சமூகத்தினரைக் கவர்ந்திருப்பது பாஜகவின் பலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
3. வலுவான ஆதாரங்களுடனான எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லாதது போன்ற தோற்றம் மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது உள்ளது. ரஃபேல் விவகாரம், சிஏஜி வெளியிட்ட அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் போன்றவை இருந்தாலும் அவற்றை எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு செல்லவில்லை. அதுபோல் பிரதமர் மோடி ஊழலில் ஈடுபடாத ஆளுமைமிக்க தலைவராக முன்னிலைப்படுத்தப்படுகிறார். இதுவும் பாஜவுக்கு ஒரு பலமாகத் தெரிகிறது.
4. என்னதான் 25க்கும் மேற்பட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து, எதிர்க்கட்சிகள் I-N-D-I-A கூட்டணியாய்ச் செயல்பட்டாலும் அந்தக் கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லை என்பதே முதன்மையான கருத்தாக முன்வைக்கப்படுகிறது. தற்போது அந்தக்குற்றச்சாடு காங்கிரஸ் கட்சியின் முயற்சியால் சரிசெய்யப்பட்டு வந்தாலும் முழுமையாக சரிசெய்யப்பட்டு கூட்டாக சேர்ந்து பெரிய அளவில் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்தினால் தான் நம்பிக்கை பிறக்கும். அடுத்து, பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு தலைவரை நிறுத்துவதற்கும் அக்கூட்டணியில் சிறந்த தலைவர்கள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. நிறுத்துவதிலும் கட்சிகளிடையே பல பிரச்னைகள் நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. மேலும், சில மாநிலங்களில் அக்கூட்டணிக் கட்சிக்களுக்குள்ளேயே மதிப்பு கொடுப்பதில்லை; தொகுதிப் பங்கீட்டிலும் பிரச்னை நிலவுகிறது. இதுதான் பாஜகவின் மிகப்பெரிய அசுரபலமாக இருக்கிறது.
5. காங்கிரஸின் முகமாக ராகுல் காந்தி அரசியலில் அறியப்பட்டாலும், போதிய அனுபவம் இருந்த போதும் அவரது கட்சித் தலைவர்களே அவரை பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது அவருக்கு ஏமாற்றத்தைப் பெற்றுத் தருகிறது. அதாவது ஜோடோ யாத்திரை போன்றவற்றை மாநில கட்சிகள் தேர்தல் அறுவடைக்கு பயன்படுத்தாமல் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை கோட்டைவிட்டுள்ளனர். அதுபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பெண் ஆளுமைகளில் சிறந்து விளங்கினாலும் அவருக்கு தேசிய அளவில் ஆதரவு இல்லாமல் இருக்கிறது. இதுவும் ஒரு பலமாகப் பார்க்கப்படுகிறது.
6. மக்களின் குறைகளைப் பேசும் ராகுலால், மோடி போன்று பேச்சில் மாற்றத்தையும் வசீகரத்தையும் கொடுக்க முடிவதில்லை என்று சொல்லப்படுகிறது. அப்படி வசீகரமாக பேச்சாக இருந்தாலும் தேர்தல் பொதுக்கூட்டங்களில் அதனை பயன்படுத்தி ஓட்டாக மாற்றவதில் ஏதோ சிக்கல் இருந்து கொண்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஆனால், மோடியோ பிரச்சார பீரங்கியாக இருக்கிறார். பெரும்பாலான நாட்கள் பிரசார கூட்டங்களில் அவர் செலவிடுகிறார். வாக்குகளுக்காக எந்த அளவிற்கு இறங்கி அடிக்கும் அளவிற்கு பிரதமரின் பேச்சு இருக்கும். திமுகவை குறிவைக்க வேண்டும் என்றால் திமுகவை தொடர்ந்து டார்க்கெட் செய்து பேசுவார். அதிமுகவை ஈர்க்க வேண்டும் என்றால் அதனை மனதில் வைத்தேல் பேச்சில் காய்களை நகர்த்துவார். உதாரணத்திற்கு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் பிரசாரத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றியும், அடுத்து வந்தபோது, மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பற்றியும் பேசினார். இவர்களைப் பற்றி அவர் திடீரென பேசி, அக்கட்சிகளுக்கு கூட்டணிக்கான மறைமுக அழைப்பையும் விடுத்ததுடன், அந்தப் பேச்சின் மூலம் இதர வாக்காளர்களையும் கவர்ந்தார். ஆக, பாஜகவுக்கு இது ஒரு பெரிய பலமாக இருக்கிறது.
7. எதிர்க்கட்சிகளில் இருக்கும் அதிருப்தியாளர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்வதில் பாஜக கைதேர்ந்து விளங்குவதாக அரசியல் வல்லுநர்களால் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம், அவர்களுக்கு உரிய பதவியும் தகுதியும் வழங்கி அவர்கள்மூலம் பாஜகவுக்கு வாக்குச் சதவிகித்தை அதிகரித்துக் கொள்கிறது என அக்கட்சி மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. ஆக, இந்தச் செயலும் அவர்களுக்கு ஒரு பலத்தைத் தருவதாகக் கூறப்படுகிறது.
8. ஒரு குறிப்பிட்ட நபர் மூலம் சில தொகுதிகளை, எதிர்க்கட்சிகள் கைப்பற்றும் எனத் தெரிந்துவிட்டால், அந்த நபரைப் பொதுவாக தம் கட்சிக்குள் இழுக்கப் பார்க்கிறது. இல்லையேல், அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தோண்டி எடுத்து அமலாக்கத் துறையினர் மூலம் ஜாமீனே கிடைக்காத அளவுக்கு நீண்டநாட்கள் சிறையில் வைக்கிறது. இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். இதன்மூலம் எதிர்க்கட்சிகளைப் பயத்திலேயே உறையவைக்கிறது. இதுவும் அந்தக் கட்சிக்கு ஒரு பலத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறப்படுகிறது.
9. தனக்கு எதிராக இருக்கும் அல்லது அந்தக் கட்சிகளால் வாக்குச் சதவிகிதம் குறையும் எனத் தெரியவந்தால், அந்தக் கட்சிகளின் சின்னத்தை முடக்குவது அல்லது கட்சிகளைத் துண்டுதுண்டாக முறிக்கும் வேலைகளில் பாஜக மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது என்பதும் விமர்சகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும், ஒரு மாநிலத்தில் பாஜகவைப் பலப்படுத்த அம்மாநிலத்தைச் சேர்ந்த பிரபலங்களையோ அல்லது திரை நட்சத்திரங்களையோ கட்சிக்குள் கொண்டுவர முயற்சி செய்கிறது எனவும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இது பாஜகவுக்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.
10. தேர்தல் ஆணையம், அமலாக்கத் துறை ஆகியன அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதும் அவர்களுக்குச் சாதகமாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். தவிர, பாஜகவை நிலைநிறுத்த, வாக்கு வங்கியை அதிகரிக்க... சாதாரண தொண்டருக்கும் பெரிய அளவில் பொறுப்பு கொடுப்பது அல்லது விருதுகளை வழங்குவது அக்கட்சிக்கு பெரிய பலமாக உள்ளது.
1. சிறுபான்மை சமூகத்தினரின் ஒட்டுமொத்த வெறுப்பு, அடித்தட்டு, பட்டியலின மக்களின் அதிருப்தி ஆகியவற்றால் பாஜக அதிகமான எதிரிகளைச் சம்பாதித்துக் கொள்வது அக்கட்சியின் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.
2. அதானி உள்ளிட்ட பெரிய பணக்காரர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே உதவும் வகையில் சில திட்டங்களைச் செயல்படுத்துவதால் விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோருக்கு பாஜக எதிரியாக இருப்பது, அக்கட்சியின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டுவதாகச் சொல்லப்படுகிறது.
3. இந்துத்துவா கொள்கை, சனாதனம் உள்ளிட்ட பேச்சுகளால் தென் மாநில மக்களிடம் வெறுப்பை விதைப்பதும், நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றுக்கு விலக்கு அளிக்காததும் பாஜகவுக்கு பலவீனங்களில் ஒன்றாக இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது.
4. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்காததும், பல மாநிலங்களில் பாஜகவினரால் பெண்கள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படுவதும் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காததும் பாஜகவுக்கு பலவீனங்களாக இருக்கின்றன என்கின்றனர் அரசியல் ஆளுமைகள்.
5. மணிப்பூர் வன்முறை தொடர்பாக, பிரதமர் இதுவரை அங்கு செல்லாததும் அம்மாநில மக்களுக்கு ஆதரவு கூறாததும், அந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணாததும் அக்கட்சிக்கு ஒருவித பலவீனத்தைத் தரும் எனக் கூறப்படுகிறது.
6. அரசு சார்ந்த நிகழ்வுகளைத் தொடங்கிவைத்து அதன்மூலம் அரசியல் பொதுக்கூட்டங்களை நடத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வரும் பாஜக, அதன்மூலம் பலவீனத்தையே சந்திக்கிறது எனக் கூறப்படுகிறது.
7. எதிர்க்கட்சிகளின் குடும்ப மற்றும் வாரிசு அரசியல் பற்றிப் பேசும் பிரதமர் மோடி, அவரது கட்சியிலேயே பலரின் வாரிசுகளுக்கு பதவிகள் வழங்குவது குறித்தும் எதிர்க்கட்சிகள் பேசுவது பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.
8. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக விமர்சனங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக தென் மாநிலங்களில் இந்த குற்றச்சாட்டு அதிகமாகவே இருக்கிறது. டெல்லி, மேற்குவங்கம் உள்ளிட்ட பாஜக ஆளாத எதிர்க்கட்சிகளின் மாநிலங்களில் இருந்தும் இந்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
9. பாஜகவினர் செய்யும் தவறுகளுக்கு, மேலும்மேலும் இடம்கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்துவதுடன், கட்சியிலும் வேறுவேறு பொறுப்புகள் வழங்கப்படுவது பாஜகவுக்கு பலவீனத்தைத் தரும் எனக் கூறப்படுகிறது. உதாரணத்திற்கு, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டில் அக்கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே பொறுப்பு வழங்கியது விமர்சனமானது.
10. முதல் குடிமகனாக இருக்கும் குடியரசுத் தலைவர் திரெளவுபதி முர்முவை, புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவின் அழைப்பு விடுக்காதது பேசுபொருளானதுடன், அந்தச் செயலும் பாஜகவின் பலவீனமாகக் கருதப்படுகிறது.