பாஜக 2-ம் வேட்பாளர் பட்டியல்: தட்சின கன்னடாவில் கேப்டன் பிரிஜேஷ் சௌதா; மனோகர் லால் கட்டரும் போட்டி

மக்களவைத் தேர்தலுக்காக 72 பெயர்கள் அடங்கிய இரண்டாவது வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.
பாஜக
பாஜக twitter

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேசம் முழுவதிலும் அரசியல் களம் தகிதகிக்கிறது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப்பங்கீடுகள், முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்கள் என நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகள் வந்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது பாரதிய ஜனதா கட்சி. கடந்த 2ஆம் தேதி வெளியான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் முதல் வேட்பாளர் பட்டியலில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட 195 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் 72 வேட்பாளர்களின் பெயர்களைக் கொண்ட இரண்டாம் கட்ட பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது. பாஜக வெளியிட்டுள்ள அந்தப் பட்டியலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மகாரஷ்டிரா மாநிலம் நாக்பூரில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாது இருந்த சூழலில், கட்கரி மக்களவையில் போட்டியிடுவது நிச்சமற்று இருந்தது. அவரை பாஜக ஓரம் கட்டுகிறதா என்ற கேள்விகளெல்லாம் எழுப்பப்பட்டன. பாஜக அவமதித்தால் அங்கிருந்து வெளியேறி தனது அணியில் இணையுமாறும் உத்தவ் தாக்கரே, நிதின் கட்கரிக்கு அழைப்பு விடுத்தார். இத்தகைய சூழலில் நாக்பூர் தொகுதியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளார் நிதின் கட்கரி

அசோக் தன்வர் ஹரியானா மாநிலம் சிர்சா தொகுதியிலும், அனுராக் தாக்கூர் இமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூரிலும் களம் காண்கிறார்கள். மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் பிரகலாத் ஜோஷி முறையே மும்பை வடக்கு மற்றும் தார்வாட் தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிய மனோகர் லால் கட்டர் அம்மாநிலத்தின் கர்னால் தொகுதியில் களம் காண்கிறர்.

கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஹவேரியிலும், உத்தராகண்ட் மாநில முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ஹரிதுவாரிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய் ராகவேந்திரா ஷிமோகா தொகுதியில் களம்காண்கிறார். பாஜக தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா, பெங்களூரு தெற்கு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

பாஜக
பதவியேற்புக்கு காத்திருக்கும் பொன்முடி... டெல்லி புறப்பட்ட ஆளுநர் RN ரவி... காரணம் இதுதானா?!

மூன்றுமுறை எம்.பி.யாக இருந்த நளின்குமார் கட்டீலுக்கு பதிலாக 43 வயதான கேப்டன் பிரிஜேஷ் சௌதாவை தட்சிண கன்னடா மக்களவைத் தொகுதியிக்கு வேட்பாளராக பாஜக தேர்வு செய்துள்ளது. கட்டீலுக்கு எதிராக அதிருப்தி வாக்குகள் இருப்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநிலத்தின் சிறந்த கல்வி அறிவுள்ள தட்சிண கன்னடாவில் படித்த மற்றும் புதிய முகத்தை எம்.பியாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் இருப்பதாகவும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பேச முடியாத காரணத்தால் கட்டீல் பலமுறை சிக்கலுக்கு உள்ளானதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் அரசியலில் இருந்து விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிட்ட தொகுதியில் ஹர்ஷ் மல்ஹோத்ரா போட்டியிட இருக்கிறார்.

இரண்டாவது பட்டியலில் மகராஷ்டிரா மற்றும் கர்நாடகாவுக்கு தலா இருபது வேட்பாளர்களும், குஜராத்திற்கு 7 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஹரியானா, தெலங்கானாவிற்கு தலா 6 வேட்பாளர்களும், மத்திய பிரதேசத்திற்கு 5 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com