கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்: தமிழக எல்லையில் உஷார் நிலை...!
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவ துவங்கியுள்ளதால் தமிழக கேரள எல்லை பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், வாகனங்களை சோதனை செய்து பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள் திடீரென மடிந்து விழ துவங்கியதால் இறந்த கோழிகளை கேரள கால்நடைத்துறை சோதனை செய்தது. அப்போது கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இந்த நிலையில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி இன்று தமிழக- கேரள எல்லை பகுதியான படந்தாலுமூடு பகுதியில் உள்ள காவல்துறை சோதனை சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்து அந்த வாகனங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை கால்நடைத்துறை ஊழியர்கள் தெளித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட கால்நடைத்துறை அதிகாரி கூறும்போது, “ கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்து அந்த வாகனங்களில் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து விடுகிறோம். இறைச்சி கழிவுகளை கேரளாவில் இருந்து ஏற்றி வரும் வாகனங்களை திருப்பி கேரளாவுக்கே அனுப்பி வைக்கப்படும்” என்றார். இதனிடையே கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் ஏற்றிவந்த டெம்போ ஒன்றை அதிகாரிகள் பிடித்து கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.