ஜார்க்கண்ட் | திருமணம் முடிந்து 36 நாட்கள் தான்.. கணவருக்கு உணவில் விஷம் வைத்துக் கொன்ற மனைவி!
மேகாலயாவில் சோனம் ரகுவன்ஷி தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொன்றதாகக் கூறப்படும் பரபரப்பான தேனிலவு கொலை வழக்கைத் தொடர்ந்து, ஜார்க்கண்டிலும் இதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராம்சந்திரபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள விஷுன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாத் சிங். இவரது மகள் சுனிதா. இவருக்கும், ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டம் பஹோகுந்தர் கிராமத்தில் வசிக்கும் புத்நாத் சிங்கிற்கும், கடந்த மே 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு மறுநாள் சுனிதா தனது பெற்றோர் வீட்டிற்குப் புறப்பட்டபோது, இருவீட்டார் தரப்பில் பிரச்னை தொடங்கியுள்ளது. அப்போது சுனிதா, ”எனக்கு புத்நாத்தைப் பிடிக்கவில்லை; அவனுடன் வாழப் போவதில்லை” என்றும் கூறியிருக்கிறார். இருப்பினும், இருதரப்பினரையும் சேர்ந்த குடும்பத்தினர் அவரைச் சமாதானப்படுத்தி உள்ளனர். மேலும் இதுதொடர்பாக, கடந்த ஜூன் 5ஆம் தேதி பஞ்சாயத்து ஒன்று நடைபெற்றுள்ளது.
அதைத் தொடர்ந்து சுனிதா புத்நாத்துடன் தனது கணவர் வீட்டிற்குத் திரும்பினார். பின்னர் தம்பதியினர் இருவரும், ஜூன் 14ஆம் தேதி சத்தீஸ்கரில் உள்ள ராமானுஜ்கஞ்ச் சந்தைக்குச் சென்றுள்ளனர். அங்கு விவசாயப் பயன்பாட்டிற்கு பூச்சிக்கொல்லி மருந்து தேவை என்று கூறி, அதை வாங்குமாறு சுனிதா புத்நாத்தை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அந்த மருந்தை ஜூன் 15ஆம் தேதி இரவு, சுனிதா தனது கணவரின் உணவில் கலந்ததாகக் கூறப்படுகிறது. மறுநாள் காலை அவர் எழுந்திருக்கவில்லை. புத்நாத்தின் தாயார் ராஜ்மதி தேவி, தனது மருமகள் மீது கொலைக் குற்றம்சாட்டி புகார் அளித்ததை அடுத்து தற்போது இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார் சுனிதாவைக் கைது செய்திருப்பதுடன், அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த அறிக்கை கிடைத்த பிறகு மரணத்திற்கான காரணம் உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். திருமணமான 36 நாட்களில் 22 வயது பெண் ஒருவர், தனது கணவருக்கு விஷம் வைத்துக் கொன்ற செய்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.