முடிவுக்கு வந்த விவாதம் |பாஜகவின் தேசிய செயல் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபின் நியமனம்!
பாஜகவின் தேசிய செயல் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக ஜகத் பிரகாஷ் நட்டா இருந்து வந்தார். ஆனால், இவருடைய பதவிக்காலம் முடிவடைந்துவிட்ட நிலையில் அடுத்த தலைவர் யார் என கடந்த சில மாதங்களாகவே விவாதிக்கப்பட்டு வந்தது. இந்தப் பதவிக்கு பல தலைவர்களின் பெயர்கள் பல மாதங்களாக அடிபட்டன. ஆயினும் பல மணிநேரம் நடந்த இந்த முக்கியக் கூட்டங்களில் யாருடைய பெயரும் அங்கீகரிக்கப்பட்டதாக செய்திகள் வரவில்லை. இந்த நிலையில், பாஜகவின் தேசிய செயல் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார். "பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக பீகார் அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் நிதின் நபினை, நாடாளுமன்ற வாரியம் உடனடியாக நியமித்துள்ளது" என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் ஓர் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
ஐந்து முறை எம்.எல்.ஏ.வுமான நிதின் நபின், தற்போது பீகார் அரசாங்கத்தில் கேபினட் அமைச்சராக உள்ளார். முன்னதாக, உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவராக பங்கஜ் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். அப்போது, அதே மாநிலத்திலிருந்து பாஜக அதன் தேசிய கவுன்சில் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தது. ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத், பிரஜேஷ் பதக், கேசவ் பிரசாத் மௌரியா, பூபேந்திர சவுத்ரி, ஸ்மிருதி இரானி, சூர்ய பிரதாப் ஷாஹி, சுதந்திர தேவ் சிங் மற்றும் ராமபதி ராம் திரிபாதி போன்ற மூத்த தலைவர்கள் உட்பட மொத்தம் 120 புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள், தேசிய பாஜக தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பர் எனக் கூறப்பட்டது. அந்த வகையில், தற்போது பாஜகவின் தேசிய செயல் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

