உ.பி. | பாஜக புதிய தலைவராக பங்கஜ் சவுத்ரி நியமனம்!
உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவராக பங்கஜ் சவுத்ரி நியமிக்கப்பட்டார். இதற்காகன அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அமைச்சரும் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் வெளியிட்டிருக்கிறார்.
மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசம் பெரும் பங்கு வகிக்கும் நிலையில், அங்கு பாஜக தற்போது ஆட்சியில் உள்ளது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இந்த நிலையில், அம்மாநில பாஜகவின் புதிய தலைவராக பங்கஜ் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது வேட்பு மனுவை முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் பிரஜேஷ் பதக், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, முன்னாள் மாநிலத் தலைவர் சுதந்திர தேவ் சிங், சூர்யபிரதாப் ஷாஹி, சுரேஷ் கன்னா, முன்னாள் ஆளுநர் பேபி ராணி மௌரியா ஆகியோர் ஆதரித்தனர். முன்னதாக, இப்பொறுப்பை சவுத்ரி பூபேந்திரா வகித்துவந்தார். தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய நியமனம் குறித்து மத்திய அமைச்சரும் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மத்திய நிதித்துறை இணையமைச்சரும், ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த குர்மி தலைவருமான பங்கஜ் சவுத்ரி, உத்தரப்பிரதேசத்தின் முக்கிய முகமாக அறியப்படுகிறார். இவர், மகாராஜ்கஞ்சிலிருந்து ஏழு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024 மக்களவைத் தேர்தலின்போது குர்மி வாக்காளர்களிடையே சில பிரிவுகளிடையே ஏற்பட்ட அதிருப்திக்குப் பிறகு, ஓபிசி வாக்காளர்களுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாக இந்த தலைமை மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
பங்கஜ் சவுதிர் தேர்வு தவிர, அதே மாநிலத்திலிருந்து பாஜக அதன் தேசிய கவுன்சில் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தது. ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத், பிரஜேஷ் பதக், கேசவ் பிரசாத் மௌரியா, பூபேந்திர சவுத்ரி, ஸ்மிருதி இரானி, சூர்ய பிரதாப் ஷாஹி, சுதந்திர தேவ் சிங் மற்றும் ராமபதி ராம் திரிபாதி போன்ற மூத்த தலைவர்கள் உட்பட மொத்தம் 120 புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தேசிய பாஜக தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பர்.

