பெங்களூரு டு புனே.. நிறுவனத்தை மாற்றும் தொழிலதிபர்.. காரணம் கன்னடமா?
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தாலும், மொழிகள்வாரியாக பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியும், இணைப்பு மொழியாக ஆங்கிலமும் இருக்கின்றன. இதில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக அவ்வவ்போது பல மாநிலங்களில் எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமாக கர்நாடகா விளங்குகிறது. அவ்வப்போது மொழிப் பிரச்னையில் சிக்கிக் கொள்கிறது. அந்த வகையில், சமீபத்தில் ”இந்தியில் மட்டுமேதான் பேசுவேன்” என வாடிக்கையாளர்களிடம் முறையிட்ட எஸ்.பி.ஐ. வங்கி மேலாளர் விவகாரம் கர்நாடகாவில் எதிரொலித்தது. இதுதொடர்பான வீடியோவில், வாடிக்கையாளர் ஒருவர், ’இது கர்நாடகா’ என மேலாளரிடம் சொல்லும்போது அதற்கு அவர், ’இது இந்தியா, உங்களுக்காக நான் கன்னடம் பேச முடியாது; இந்திதான் பேசுவேன்’ எனக் கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதல்வர் சித்தராமையா, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் எதிரொலியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனர் தனது நிறுவனத்தின் அலுவலகத்தை ஆறு மாதங்களுக்குள் புனேவுக்கு மாற்ற முடிவு செய்துள்ளார். அதற்கு கன்னடம்தான் முதற்காரணம் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "இந்த மொழி முட்டாள்தனம் தொடர வேண்டுமானால், கன்னடம் பேசாத எனது ஊழியர்கள் அடுத்து பாதிக்கப்பட நான் விரும்பவில்லை. தனது ஊழியர்கள் எழுப்பிய கவலைகளிலிருந்து இந்த முடிவு உருவானது. அவர்களின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.