”இந்திதான் பேசுவேன்” “கன்னடத்தில் பேசுங்க” - வெடித்த சர்ச்சை.. இடமாற்றம் செய்யப்பட்ட SBI மேனேஜர்!
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தாலும், மொழிகள்வாரியாக பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியும், இணைப்பு மொழியாக ஆங்கிலமும் இருக்கின்றன. இதில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக அவ்வவ்போது பல மாநிலங்களில் எதிர்ப்பு குரல்கள் எழுகின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமாக கர்நாடகா விளங்குகிறது. அவ்வப்போது மொழிப் பிரச்னையில் சிக்கிக் கொள்கிறது. அந்த வகையில், ”இந்தியில் மட்டுமேதான் பேசுவேன்” என வாடிக்கையாளர்களிடம் முறையிட்ட எஸ்.பி.ஐ. வங்கி மேலாளருக்கு எதிராக கண்டனம் எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலம் அனேகல் தாலுகாவின் சூர்யா நகரில் எஸ்பிஐயின் கிளை உள்ளது. இதன் மேலாளராக இருந்தவர் இந்தியில் பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோவில், வாடிக்கையாளர் ஒருவர், ’இது கர்நாடகா’ என்கிறார். அதற்கு மேலாளர், ’நீங்கள் எனக்கு வேலை கொடுக்கவில்லை’ எனப் பதிலளிக்கிறார். வாடிக்கையாளர் மீண்டும், ’இது கர்நாடகா’ என்று சொல்கிறார். அதற்கு மேலாளர், ’இது இந்தியா’ என்று பதில் கொடுக்கிறார். மேலும், அவர் ’உங்களுக்காக நான் கன்னடம் பேச முடியாது’ என்றும், ‘இந்திதான் பேசுவேன்’ என்றும் கூறுகிறார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரல் ஆகிய நிலையில், அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அந்த வங்கி மேலாளருக்கு மாநில முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், “கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து மக்களை அலட்சியப்படுத்திய எஸ்.பி.ஐ. வங்கி மேனேஜரின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது. வங்கி ஊழியர்கள் அனைவரும் மக்களை கண்ணியத்துடன் அணுக வேண்டும், மாநில மொழியில் பேச முயற்சிக்க வேண்டும்.
இந்தியில் பேசிய ஊழியரை பணி இடமாற்றம் செய்த எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகத்தின் விரைவான நடவடிக்கையை பாராட்டுகிறேன். வங்கி ஊழியர்களுக்கு மாநில கலாசார, மொழியை மதிப்பதற்கான விழிப்புணர்வு வகுப்புகளை மத்திய நிதியமைச்சகம் நடத்த வேண்டும். உள்ளூர் மொழியை மதிப்பது மக்களை மதிப்பதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
வைரலான இந்த காணொளியும் வங்கி அதிகாரி மீதான நடவடிக்கையும் கன்னட மொழி சர்ச்சையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. கர்நாடகாவில் வேலை செய்து வசிக்கும் புலம்பெயர்ந்தோர் உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கன்னட ஆதரவு அமைப்புகள் வாதிடுகையில், மற்றவர்கள் அம்மாநில மொழியைப் பேச கட்டாயப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.