thug life, உச்ச நீதிமன்றம்
thug life, உச்ச நீதிமன்றம்pt web

'Thug Life' திரைப்படத்தை தடை செய்தது ஏற்புடையது அல்ல - உச்சநீதிமன்றம் கருத்து

‘தக் லைஃப்’ திரைப்படத்தை தடை செய்தது ஏற்புடையதல்ல! - சிலரின் அச்சுறுத்தலால் ஒரு திரைப்படத்தை வெளியிடாமல் இருப்பது ஏற்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் கருத்து.
Published on

நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தக் லைஃப். இத்திரைப்படத்தின் பிரமோஷன் விழா மே 30ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அப்போது, தமிழிலிருந்து கன்னடம் பிறந்தது என கமலஹாசன் பேசியிருந்தார். இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தன. ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்படமாட்டாது என திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்தது. மேலும், ‘திரைப்படம் திரையிட்டால் திரையரங்கம் தீயிட்டுக் கொளுத்தப்படும்’ என கன்னட அமைப்புகள் சிலவும் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதனால் கர்நாடகாவில் மட்டும் இத்திரைப்படம் திரையிடவில்லை.

kamal thug life
kamal thug lifeweb

இந்நிலையில், தக் லைஃப் திரைப்பட தடை உத்தரவுக்கு எதிராக மகேஸ் ரெட்டி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இவ்வழக்கு கடந்த 13ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடகா அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை இன்றைய தினத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர். இதனிடையே இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி உஜ்ஜல் புயான் அமர்வு, குண்டர்கள் மற்றும் வன்முறையாளர்கள் நம்முடைய அரசியலமைப்பு விதிகளை கைப்பற்ற அனுமதிக்க முடியாது எனவும், எவர் ஒருவரும் திரைப்படத்தை வெளியிட உரிமை உண்டு எனவும் தெரிவித்தனர். அதே நேரத்தில் மக்கள் அத்திரைப்படத்தை பார்த்து முடிவு செய்யட்டும் என்றும் தெரிவித்தனர்.

thug life, உச்ச நீதிமன்றம்
ஈரானை அணு ஆயுதங்களை நோக்கி தள்ளுகிறதா இஸ்ரேல்?

மேலும், திரைப்படத்தை திரையிடுவதை தடை செய்ய முடியாது எனத் தெரிவித்த நீதிபதி இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு முடிவு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அதோடு, இவ்விவகாரத்தில் உரிய விளக்கத்தை தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். அதற்கு எதிர்மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த விவகாரம் மக்களின் உணர்வுபூர்வமான விஷயம் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு நீதிபதிகள், ஒரு திரைப்படம் தடையில்லா சான்றிதழ் பெற்று இருந்தால் அதனை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் திரையிடுவதற்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியதோடு , சட்டத்தின்படி அனைத்தும் நடைபெற வேண்டுமே தவிர சிலரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றார்போல் நடக்கக்கூடாது என அறிவுறுத்தினர். மேலும் இந்த விவகாரத்தில் கர்நாடகா அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்குமாறு கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞரை அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்fb

மேலும் சிலர் அச்சுறுத்துவதால் ஒரு திரைப்படம் வெளியிடப்படாமல் இருப்பது ஏற்க முடியாது என்றும், திரைப்படத்தை வெளியிட CBFC சான்றிதழ் பெற்ற பின்னர் படத்தை திரையிடக்கூடாது என தடுக்க முடியாது எனவும், படம் வெளியான பிறகு பொதுமக்கள் படத்தை பார்க்காமல் கூட இருக்கலாம்! ஆனால் அதற்காக படத்தை தடை செய்வது ஏற்புடையதல்ல எனவும் கருத்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com