அரிசி ஏற்றுமதிக்கு தடை எதிரொலி! அமெரிக்க, கனடா கடைகளில் க்யூவில் காத்திருந்து வாங்கும் இந்தியர்கள்!

பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை செய்துள்ளது.
rice export ban
rice export banpt web

உலகளவில் அரிசு ஏற்றுமதி செய்யும் பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் அரிசியில் ஏறத்தாழ 40% இந்தியாவில் இருந்தே உலகில் உள்ள 140-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதிலிருந்தே இதன் சந்தை எவ்வளவு பெரியது என்பதை புரிந்து கொள்ள முடியும். கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 22.26 மில்லியன் டன் அரிசியை இந்தியா உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது இதுவரை எட்டப்படாத உச்சபட்ச அளவாகும் அத்துடன் ஆண்டுதோறும் செய்யப்படும் ஏற்றுமதியின் அளவில் 3.5 சதவிகிதம் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு அடுத்தபடியாக தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான், பர்மா, சீனா உள்ளிட்ட நாடுகள் தான் உலகிற்கு அதிகளவில் அரிசியை ஏற்றுமதி செய்கின்றன. ஆனால், இவை அனைத்துமே இந்தியாவை ஒப்பிடும்போது மிகக் குறைவான எண்ணிக்கை தான். இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு பல்வேறு நாடுகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

உணவு மற்றும் நுகர்வோர்த்துறை அமைச்சகம் ஜூலை மாதம் 20 ஆம் தேதி பாஸ்மதி அல்லாத பிற அரிசிகளை ஏற்றுமதி செய்ய தடை செய்துள்ளது. நாட்டில் நிலவும் ஏற்ற, இறக்க விலையை நிலைப்படுத்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

வடக்கில் அரிசி உற்பத்தி செய்யும் மாநிலங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள நெல் விளைவிக்கும் இடங்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் வானிலை மாற்றம் போன்ற காரணங்களால் அரிசி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி போதுமான அளவில் இந்திய சந்தைகளில் கிடைப்பதை உறுதி செய்யவும் விலை ஏற்றத்தை தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், புழுங்கல் அரிசிக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது ஏற்றுமதிக்காக துறைமுகங்களில் காத்திருக்கும் பொருட்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் காரணமாக அமெரிக்காவில் உள்ள கடைகளில் ஜூலை 21 அன்று அனைத்து அரிசிகளும் விற்றுத்தீர்ந்தன. ஆசிய மக்கள் அதிகம் வசிக்கும் டெக்ஸாஸ் மாகாணத்தில் அரசிகளின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 பவுண்ட் மதிப்புள்ள அரிசிப்பை 34 டாலருக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது எப்போதும் விற்கப்படும் விலையை விட சுமார் 11% அதிகம். அரிச் விலை உயர்வு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்திலும், பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அங்குள்ள கடைகளை முற்றுகையிட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் நேற்று முதல் வைரல் ஆகிக் கொண்டிருக்கின்றன.

மூன்றாண்டுகளுக்கு முன் இந்திய அரசு கோதுமை ஏற்றுமதியை கட்டுப்படுத்திய போது இதே சூழலை எதிர்கொண்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

உலக நாடுகளைப் பொறுத்தவரை பங்களாதேஷ், ஜனகல், தென்னாப்பிரிக்கா, லைப்ரியா, நேபால், ஐக்கிய அரபு அமீரகம், மடகாஸ்கார் உள்ளிட்ட நாடுகள் தான் இந்தியாவை அரிசிக்காக அதிகம் நம்பியுள்ளது.

கடந்த 2020- 21 ஆம் நிதி ஆண்டை பொறுத்தவரை பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளில் நேபாள நாட்டிற்கு 12.84 லட்சம் டன், பெணின் நாட்டிற்கு 12.3 ஒரு லட்சம் டன், செனகல் நாட்டிற்கு 10.36லட்சம் டன், வங்கதேசத்திற்கு 9.11 லட்சம் டன், டோகோ 7.8 லட்சம் டன், கோட் டி 'ஐவோரி 7.3 லட்சம் டன், கினியா 6.1 லட்சம் டன், மலேசியா 4.53 லட்சம் டன், ஈராக் 2.9 லட்சம் டன், ஐக்கிய அரபு நாடுகள் 2.9 லட்சம் டன் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசின் இந்த முடிவு உலகளவில் சில உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி உற்பத்தியில் உள்ள சீனா சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கும் விளைபொருட்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதும் விளை பொருட்களின் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அடுத்த ஆண்டுக்குள் இந்த தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com