ஆந்திரா | முழுவதும் எரிந்த ஆம்னி பேருந்து.. 19 பேர் உயிரிழந்த சோகம்.. விபத்து நடந்தது எப்படி?
ஆந்திராவில் தனியார் சொகுசுப் பேருந்து தீ பற்றி எரிந்ததில், அதில் பயணித்த 19 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
காவேரி டிராவல்ஸ் எனும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான சொகுசுப் பேருந்து, ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள உல்லிந்தகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலை 44இல் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் மீது இருசக்கர வாகனம் ஒன்று மோதி அதன் அடியிலேயே சிக்கிக் கொண்டுள்ளது. இதில் பேருந்தின் எரிபொருள் டேங்க் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்தில் தீ பற்றி எரிந்து மளமளவென பரவத் தொடங்கியுள்ளது.
தீப்பற்றியதை உணர்ந்த பயணிகள் பக்கவாட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு பேருந்தில் இருந்து வெளியேறியுள்ளனர். அந்த வகையில் சுமார் 10 பேர் வெளியேறியதாகத் தெரிகிறது. ஆனால், அதிவேகமாக தீ பரவி பேருந்து முழுவதும் எரிய தொடங்கியதால் பலர் வெளியேற முடியால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதில், தற்போது வரை 19 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இது, அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்டநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால் அதற்குள் பேருந்து முழுமையாக எரிந்து கருகியது. இந்த விபத்தின்போது, ஓட்டுநர் தப்பி ஓடியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு முற்றிலுமாக எரிந்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பைரெட்டி சபாரி தெரிவித்துள்ளார்.
தீ விபத்து ஏற்பட்டபோது பெரும்பாலான பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால், உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டதாகவும், தவிர, தீ விபத்துக்குப் பிறகு பயணிகள் வெளியேறுவதும் கடினமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இறந்தவர்களுக்கு, இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி அறிவித்துள்ளார். அதேபோல், மாநில முதல்வர் சந்திர பாபு நாயுடுவும் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது அரசாங்கம் அனைத்து உதவிகளையும் செய்ய இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

