’அசாமின் இதயத்துடிப்பு’.. 40 மொழிகளில் 32,000 பாடல்கள்.. விடைபெற்ற ஜுபீன் கர்க்!
இசைக் கலைஞரும் பாடகருமான ஜுபீன் கர்கை ஒட்டுமொத்த அசாம் மாநிலமும் அணி திரண்டு வழி அனுப்பி வைத்திருக்கிறது.
இசைக் கலைஞரும் பாடகருமான ஜுபீன் கர்கை ஒட்டுமொத்த அசாம் மாநிலமும் அணி திரண்டு வழி அனுப்பி வைத்திருக்கிறது. 52 வயதாகும் ஜுபீன் சிங்கப்பூரில் நீச்சல் குள விபத்தில் உயிரிழந்திருப்பது ஒட்டுமொத்த அசாமையும் துயரத்தில் ஆழ்த்தியது. அவரது இறுதிச் சடங்கில் பல்லாயிரக்கணக்கான அசாமியர்கள் பங்கேற்றது இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.
அஸாமி மட்டுமின்றி, வங்கம், இந்தி மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டவர் ஜுபீன் கர்க். வடகிழக்கு மாநிலங்களிலேயே மிக அதிகம் சம்பளம் வாங்கும் இசைக்கலைஞராக அறியப்பட்ட ஜுபீன் கர்க், 1990களிலேயே தன் கலைப் பயணத்தைத் தொடங்கியவர். அனாமிகா எனும் இசை ஆல்பம் வாயிலாக, ’அசாமின் இதயத்துடிப்பு’ ஆனவர் ஜுபீன் கர்க். பாரம்பரிய அசாமிய நாட்டுப்புற இசையுடன், நவீன பாப் மற்றும் ராக் இசையையும் கலந்து அவர் உருவாக்கிய தனித்துவமான இசை, அசாமிய இசைக்கு ஒரு புதிய அடையாளத்தைக் கொடுத்தது. மணிரத்னம் இயக்கிய ‘தில் சே’ இந்திப் படத்தில், ஏஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய ‘Pokhi Pokhi Bidekhi’ பாடல் மூலம் கவனம் ஈர்த்தவர் ஜுபீன் கர்க். பன்முகத் திறமை கொண்ட கலைஞரான ஜுபீன் கர்க், ஒரு பாடகராக மட்டுமல்லாமல், இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் எனப் பல தளங்களில் அழுத்தமான முத்திரை பதித்தார். தன் இசை வாழ்க்கையில் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் 32,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். அவரது நேரடி இசை நிகழ்ச்சிகள் உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களைக் கவர்ந்தன.
மேலும், தன் இசையமைப்பில் பல தனி ஆல்பங்களுக்கும் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். ’தும்ஹி மோர் மத்து மோர்’ (Tumi Mor Matho Mor) என்ற அசாமியப் படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானார். பின்னர், ’கஞ்சன்ஜங்கா’, ’மிஷன் சைனா’ போன்ற படங்களை இயக்கி நடித்தார். அவரது இந்த பன்முகத் திறமையே, அசாம் மக்களின் இதயங்களில் அவருக்கு ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்தது.
1990களின் பிற்பகுதியிலிருந்து பாலிவுட் படங்களில் பாடல்களைப் பாடிவந்தார். 2006இல் வெளியான ’கேங்ஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ’யா அலி’ பாடல் இந்தியா முழுவதும் அவருக்குப் பெரும் புகழ் தேடித் தந்தது. ஆனால், அவர் மீண்டும் அசாமிற்கே திரும்பி, தன் தாய் மண்ணின் இசைக்கும் திரைப்படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். கலை மூலம் தனக்குக் கிடைத்த புகழ் வெளிச்சத்தை சமூகப் பிரச்னைகள் மீது ஒளிபாய்ச்சப் பயன்படுத்தினார் ஜுபீன். வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாத குழுவினரின் வன்முறைக்கு எதிராக மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தொடர்ந்து குரல் எழுப்பிவந்தார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (CAA) எதிரான போராட்டங்கள் உட்பட பல சமூகப் போராட்டங்களுக்கு ஆதரவளித்தார். வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் நிவாரணத்துக்காக நிதி திரட்ட இசை நிகழ்ச்சிகளையும் நடத்தினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தன் வீட்டையே கோவிட் சிகிச்சை மையமாக பயன்படுத்த அனுமதித்தார்.
இந்த நிலையில், சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, அவர் அங்கு சென்றிருந்தபோது, நீச்சல் குள விபத்தில் உயிரிழந்தார். சிங்கப்பூரிலே அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு இந்தியாவிற்கு வந்தது. ஆனால் அவரது மரணத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என மக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து இங்கும் இரண்டாவது முறை உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவரது மரணம் அசாமில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று அவருடைய உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்ட பிறகு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். இதனால் அப்பகுதியே ஸ்தம்பித்து போனது. இறுதியில், அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.