ஜெட் வேகத்தில் பறந்த கார்.. மோதிவிட்டு நிற்காமல் சென்ற நடிகை.. பறிபோன கல்லூரி மாணவர் உயிர்! | Assam
'ருத்ரா' திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் அஸ்ஸாமி நடிகை நந்தினி காஷ்யப். இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி, வசூல்ரீதியாக பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், இப்படத்தில் நடித்த நடிகை நந்தினி காஷ்யப், கவுஹாத்தியில் விபத்து வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 21 வயது மாணவர் இறந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக கவுஹாத்தி போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 25ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கவுஹாத்தி நகராட்சியில் (GMC) பகுதி நேரமாக பணிபுரிந்த நல்பாரி பாலிடெக்னிக் மாணவரான சாமியுல் ஹக், தகிங்காவ்ன் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது நந்தினி காஷ்யப் வேகமாக ஓட்டி வந்ததாகக் கூறப்படும் ஸ்கார்பியோ கார், அவர் மீது மோதியது. இதில் சாமியுல் பலத்த காயமடைந்தார். மேலும், காயமடைந்த மாணவருக்கு உதவாமல், நடிகை அங்கிருந்து தப்பி ஓடியதாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அந்த மாணவர், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
இதையடுத்து, சிசிடிவி மற்றும் பொதுமக்கள் அளித்த சாட்சிகளின் பேரில், நடிகை நந்தினி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், அவரைக் கைது செய்த போலீஸார், அவருடைய காரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கவுஹாத்தி காவல்துறையின் டி.சி.பி (போக்குவரத்து) ஜெயந்த சாரதி போரா, ”நடிகை நந்தினி காஷ்யப்பை இன்று நாங்கள் கைது செய்துள்ளோம். முன்னதாக, வழக்கு ஆரம்பத்தில் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளின்கீழ் பதிவு செய்யப்பட்டதால், நாங்கள் அவரிடம் மட்டுமே விசாரித்தோம். இருப்பினும், நேற்று மாலை, பாதிக்கப்பட்டவர் காயங்களால் இறந்தார். எனவே, கொலைக்கு சமமான குற்றவியல் கொலை குற்றச்சாட்டுகளைச் சேர்த்துள்ளோம். இது ஜாமீனில் வெளிவர முடியாதது” எனத் தெரிவித்துள்ளார்.