அசாம் பழங்குடியினருக்கு துப்பாக்கி உரிமம் வழங்க முடிவு; ஒப்புதல் வழங்கிய அமைச்சரவை!
அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமைத்தாங்கிய அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, “ துப்ரி, நாகோன், மோரிகான், பார்பெட்டா, தெற்கு சல்மாரா மற்றும் கோல்பாரா போன்ற மாவட்டங்களில் பழங்குடி மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அவர்கள் எப்போதும் அச்சத்திலேயே வாழ்கிறார்கள். அசாம் மிகவும் கடினமான மற்றும் உணர்திறன் மிக்க மாநிலம். அசாம் அரசு இன்று அமைச்சரவையில் மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
தொலைதூர, பாதிக்கப்படக்கூடிய மற்றும் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் தகுதியுள்ள பழங்குடியின நபர்களுக்கு ஆயுத உரிமங்களை வழங்க முடிவு செய்துள்ளோம். ஆயுத உரிமங்களை வழங்குவதற்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் இந்த உரிமங்கள் வழங்கப்படும்.
ஆயுத உரிமம் குறித்த அரசாங்கத்தின் முடிவு ஒரு முக்கியமான மைல்கல். துப்பாக்கி பயன்படுத்த லைசன்ஸ் வேண்டும் என்ற கோரிக்கை. அசாம் கிளர்ச்சியின் (1979-85) காலத்திலிருந்தே இருந்து வருகிறது. ஆனால், எந்த அரசாங்கமும் ஒரு முடிவை எடுக்கத் துணியவில்லை. வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வருபவர்களால், அசாம் பழங்குடியினருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆயுத உரிமங்கள் முன்பே வழங்கப்பட்டிருந்தால், பல குடும்பங்கள் தங்கள் நிலத்தை விற்று அந்த கிராமங்களிலிருந்து வெளியே வந்திருக்க மாட்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
எனவே, பாதிக்கக்கூடிய மற்றும் வெகுதூரத்தில் உள்ள பழங்குடியின தகுதியுள்ள மக்கள் ஆயுத உரிமங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார் அம்மாநில முதலமைச்சர்.