Assam elections 2026 .. BJP's 31 action-packed announcements
Assam Legislative assembly web

அசாம் தேர்தல்.. வெள்ளமே வராத அசாம்? பாஜகவின் 31 அதிரடி அறிவிப்புகள்!

"பாதுகாப்பான மற்றும் வளர்ந்த அசாம்" என்ற முழக்கத்துடன், அசாமை இந்தியாவின் 'கிழக்கு நுழைவாயிலாக' மாற்றப்போவதாக பாஜக உறுதியளித்துள்ளது. அந்த 31 முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன? விரிவாகப் பார்ப்போம்.
Published on

அசாம் மாநிலத்தின் அரசியல் களம் இப்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள 'சங்கல்ப் பத்ரா' தேர்தல் அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட இந்த தேர்தல் அறிக்கையில், முதலாவதாக அசாம் மக்களின் நிலம், பாரம்பரியம் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதே தங்களின் முதல் கடமை என பாஜக தெரிவித்துள்ளது. இதற்காகத் தேவையான சட்டப் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு, அசாம் மக்களின் நாகரீகம் மற்றும் உரிமைகள் உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

nirmala Sitharaman
nirmala Sitharaman X

தொடர்ந்து, பொருளாதார ரீதியாக, அசாமை இந்தியாவின் 'கிழக்கு நுழைவாயிலாக' மாற்ற 5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். 'அசாம் கதி சக்தி' திட்டத்தின் மூலம் உள்கட்டமைப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். நகர்ப்புற வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து 'அசாம் நகர் உன்னயன் அபியான்' திட்டம் செயல்படுத்தப்படும்.

மாநிலத்தின் பெரும் பிரச்சனையான வெள்ள பாதிப்பைச் சரிசெய்ய 18,000 கோடி ரூபாய் செலவில் 'வெள்ளமில்லா அசாம்' திட்டம் கொண்டு வரப்படும். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். இளைஞர்கள் சுயசார்புடன் வாழத் தேவையான உதவிகள் வழங்கப்படும். ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் உப்புடன் தற்போது கடுகு எண்ணெயும் மானிய விலையில் வழங்கப்படும். மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு இலவச ரேஷன் தொடர்ந்து வழங்கப்படும்.

BJP Campaign
BJP campaign web

கல்வித் துறையில், 'ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பல்கலைக்கழகம்' மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்படும். உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் மூலம் கல்வித்துறை நவீனப்படுத்தப்படும். பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். அசாமின் சுதேச கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

Assam elections 2026 .. BJP's 31 action-packed announcements
"இது வெறும் தேர்தல் அல்ல; பாஜகவிற்கு எதிரான போராட்டம்" - மம்தா சூளுரை.!

மீன் வளர்ப்பவர்களுக்கு மீன்பிடி தடைக்காலங்களில் சிறப்பு நிதியுதவி வழங்கப்படும். வேளாண் சந்தைகளை நவீனப்படுத்த 'அசாம் கிருஷி உன்னயன் அபியான்' தொடங்கப்படும். கோச் ராஜ்பொங்ஷி, தை அஹோம், தேயிலை பழங்குடியினர் உள்ளிட்ட 6 சமூகங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். அதேபோல், பிஷ்ணுப்பிரியா மணிப்புரி உள்ளிட்ட 7 சமூகங்களை மத்திய ஓபிசி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மிசிங் மற்றும் ரபா உள்ளிட்ட பழங்குடியின தன்னாட்சி கவுன்சில்களுக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கப்படும். பழங்குடியின மற்றும் சுதேச மக்களுக்கு நிலப் பாதுகாப்பும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் உறுதி செய்யப்படும். 'பிரதமர் ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் ஏற்கனவே கட்டப்பட்ட 22 லட்சம் வீடுகளுடன், கூடுதலாக 15 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். 10 லட்சம் பாரம்பரிய நெசவாளர்களுக்கு நிதி உதவி வழங்க 'நிஜுத் சிபினி' திட்டம் கொண்டு வரப்படும்.

அசாமின் பொருளாதாரத்தை 2036-க்குள் 300 பில்லியன் டாலராக உயர்த்தவும், புதிய தொழிற்சாலைகளில் சேரும் உள்ளூர் இளைஞர்களுக்குத் தலா 10,000 ரூபாய் ஊதிய மானியம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலாவை மேம்படுத்த 'அசாம் பர்யதன் விகாஸ் அபியான்' தொடங்கப்படும். கையெழுத்திடப்பட்ட அனைத்து அமைதி ஒப்பந்தங்களும் காலக்கெடுவுக்குள் அமல்படுத்தப்படும்.

Haflong, Assam
Haflong, Assam web

அரசு ஊழியர்களின் நலன், மாநிலம் தழுவிய விளையாட்டு வளர்ச்சி மற்றும் திப்ருகார் நகரை இரண்டாவது தலைநகராக மாற்றுவது போன்றவையும் இதில் அடங்கும். பராக் பள்ளத்தாக்கின் வளர்ச்சி மற்றும் சுகாதாரத் துறையில் 8,900 கோடி ரூபாய் வரையிலான மருத்துவக் கட்டமைப்பு மேம்பாடு என 31 அம்சங்களும் இந்த அறிக்கையில் முழுமையாக இடம்பெற்றுள்ளன.

அசாமின் 126 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 4-ஆம் தேதி வெளியாகும் முடிவுகள், இந்த 31 வாக்குறுதிகள் பாஜகவிற்கு வெற்றியைத் தருமா என்பதைத் தீர்மானிக்கும்.

Assam elections 2026 .. BJP's 31 action-packed announcements
1957-ல் வேர்களை உறுதிப்படுத்திய கம்யூனிசம்.. கேரள அரசியலின் பின்னணி.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com