கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு.. அமலாக்க துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்!

புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறை
அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறைட்விட்டர்

கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

இந்தியாவில் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும், தன் பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் இருந்தபடியே உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்முகநூல்

இந்த நிலையில், முன்னதாக, அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. ”கைது நடவடிக்கையில் சட்டவிதிகள் எதுவும் மீறப்படவில்லை. உரிய காரணங்களின் அடிப்படையில்தான் விசாரணை நீதிமன்றம் அமலாக்கத் துறை காவலுக்கு உத்தரவிட்டது” என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்ததுடன், அரவிந்த் கெஜ்ரிவால் மனுவையும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு ஏப்ரல் 15ஆம் தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: 200 ரூபாய் கோடி சொத்தை நன்கொடையாக அளித்து துறவு.. குழந்தைகள் வழியில் குஜராத் கோடீஸ்வர தம்பதி!

அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறை
”சிறையில் இருப்பதற்காக சிறப்பு சலுகைகளை அளிக்க முடியாது” - கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி HC

அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

இதையடுத்து, இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவுக்கு வரும் 24-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்ட்விட்டர்

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை, அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அமலாக்கத்துறையின் வாதத்தை ஏற்ற நீதிமன்றம், அவரை ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. அவருடைய நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், திகார் சிறையில் காணொளிக் காட்சி வாயிலாக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். ’கெஜ்ரிவாலை மேலும் விசாரிக்க வேண்டியிருப்பதால் அவரது நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்’ என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை ஏற்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா கெஜ்ரிவாலின் காவலை ஏப்ரல் 23 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளான கவிதாவுக்கும் ஏப்ரல் 23 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு.. வேட்பாளரை மாற்றக்கோரி ராஜபுத்திர மக்கள் பேரணி.. ஸ்தம்பித்த குஜராத்!

அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறை
“கொல பண்ணிட்டு, தேர்தல்னு சொல்லுவீங்களா’ - கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறை காரசார வாதம்!

கெஜ்ரிவால் சிறைவாசம் குறித்து ஆம்ஆத்மி தலைவர்கள் கருத்து

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான் திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சிறையில் கடும் குற்றவாளிகளுக்குக் கிடைக்கும் வசதிகள்கூட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வருத்தமளிக்கிறது. அவர் என்ன தவறு செய்தார்? நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாதியைப் பிடித்ததுபோல் அவரை நடத்துகிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

அதேபோல், கெஜ்ரிவால் திகார் சிறையில் சித்திரவதை செய்யப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் எம்பியுமான சஞ்சய் சிங் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர், ”டெல்லியில் பெரும்பான்மையுடன் 3 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை மத்திய அரசு மற்றும் பிரதமரின் உத்தரவின் பேரில் சித்திரவதை செய்யப்படுகிறார். அவரது மன உறுதியை குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவருடைய உரிமைகள், வசதிகள் மறுக்கப்படுகின்றன. இவை அனைத்தும் வெளிப்படையாகவே செய்யப்படுகின்றன. பயங்கரமான குற்றவாளிகள்கூட சிறையில் சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் 3 முறை முதல்வராக இருந்தவர், தனது மனைவியை ஜன்னல் வழியாகவே சந்திக்க அனுமதிக்கப்படுகிறார். அதுவும் இடையில் கண்ணாடி உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: கர்நாடகா| கேள்வியெழுப்பிய பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள்.. பாதியிலேயே வெளியேறிய பாஜக எம்.பி. தேஜஸ்வி!

அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறை
டெல்லி: சிறையில் கெஜ்ரிவால்..மனைவி சுனிதா உடன் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் திடீர் ஆலோசனை! அடுத்து என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com