அஹமதாபாத் விமான விபத்து.. வலுக்கும் சந்தேகம்.. விமான பாதுகாப்பில் கேள்விகள் எழுப்பிய நீதிமன்றம்!
ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் பாதுகாப்பு குறித்து, தி ஃபெடரல் விசாரணை நிறுவனம் முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் விபத்துக்கு யாரும் விமானியை குறை சொல்ல முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்..
அஹமதாபாத்தில் கடந்த ஜூன் மாதம், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787 டிரீம்லைனர் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தின் தலைமை விமானியாக இருந்த கேப்டன் சுமீத் சபர்வால் உட்பட 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் விமானம் மோதி மருத்துவமனையில் உயிரிழந்தவர்களும் அடங்கும். இந்த விபத்து குறித்து விமான விபத்து விசாரணை பணியகம் வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், விமானியின் தவறு காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த விமானி சுமீத்தின் 91 வயது தந்தை புஷ்கரராஜ் சபர்வாலும், இந்திய விமானிகள் கூட்டமைப்பும் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில், விபத்து குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுகொண்டனர்..
இந்த மனுவை விசாரித்தபோது, உச்ச நீதிமன்றம் முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளது. நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மால்யா பாக்ஸி அடங்கிய அமர்வு, "விமானி (கேப்டன் சுமித் சப்ஹர்வால்) மீது யாரும் எந்தக் குற்றமும் சுமத்தவில்லை" என்று கூறியது.
நீதிபதி சூர்யா காந்த் மேலும் உறுதியளிக்கும் விதமாக, "விமானியின் தவறுதான் விபத்துக்குக் காரணம் என்று யாரும் கூறவில்லை" என்று கூறினார்.
விமானியின் தந்தை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், சில தரப்பினர் விமானி மீது பழி சுமத்துவதாகவும், ஒரு சர்வதேசப் பத்திரிகையும் (WSJ) இதுகுறித்துச் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதற்கு நீதிபதி பாக்ஸி, "அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. உங்கள் மகன் மீது குற்றம் சுமத்தப்படுகிறது என்றால் நீங்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் அந்தப் பத்திரிகைக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும்" என்று கூறினார்.
மேலும் இந்த விபத்து குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார். விமானப் போக்குவரத்துத் துறையில் உள்ள நிபுணர்களைக் கொண்டு இந்த விசாரணை நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விமான விபத்துக்கான தற்போதைய விசாரணையில் குறைபாடுள்ளதாகவும், விபத்துக்கு விமானியின் பிழைதான் காரணம் என்று நம்புவது சாத்தியமற்றது என்றும், பிற தொழில்நுட்ப மற்றும் நடைமுறைக் காரணங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் மனுதாரர் வாதிட்டுள்ளார்.
இந்நிலையில் விரிவான விபத்து அறிக்கை அல்லது விமான விபத்து புலனாய்வுப் பணியகத்திலிருந்து (AAI) வேறு எந்த அறிக்கைகளும் இல்லாத நிலையில், சுயதீனமாக அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தின் விசாரணை அமைப்பு (FAA) பிரையன் பெட்ஃபோர்ட் ராய்ட்டர்ஸிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. அதில் விபத்துக்குள்ளான விமானம் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, மின் இணைப்புகளில் கோளாறு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கோளாறு காரணமாக எஞ்சின்கள் நிறுத்தப்படுவதற்கு முன்பே, RAT எனப்படும் அவசரகால சக்தியை பயன்படுத்தியிருக்கலாம். இது விமானத்தில் ஏற்கனவே இருந்த மின்சார குறைபாடுகளை உறுதிப்படுத்துகிறது என்றும், இந்த விபத்துக்குப் பின்னர் ஏர் இந்தியா நிறுவனம் மூன்று விமானங்களை ஆய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், தெரிவித்துள்ளது. நீதிமன்றம் இந்த வழக்கை மேலும் விசாரணைக்காக நவம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

