"மதம் மாறினால் பட்டியலின அந்தஸ்து கிடையாது" - ஆந்திரா உயர்நீதிமன்றம்!
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த மதபோதகரான சிந்தட ஆனந்த் என்பவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் அக்காலா ராமிரெட்டி என்பவர் தன்னை சாதிப் பெயரை கூறி திட்டியதாகவும் இதன் காரணமாக பட்டியலின வன்கொடுமை வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சிந்தட ஆனந்த் கூறியிருந்தார். ஆனால் அவர், பல ஆண்டுகளுக்கு முன்பே இந்து மதத்திலிருந்து விலகி கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேல் மதபோதகராக இருப்பதாகவும், எனவே தன் மீது பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் ராமிரெட்டி தரப்பில் வாதிடப்பட்டது.
மறுபுரம், சிந்தட ஆனந்திடம் செல்லத்தக்க சாதிச் சான்றிதழ் இருப்பதாகவும் என அவர் சட்டப்பாதுகாப்புக்கு உரியவர் என்றும் அவரது தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஹரிநாத், சிந்தட ஆனந்தின் மனுவை தள்ளுபடி செய்தார்.
சம்மந்தப்பட்ட நபர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியபின் பட்டியலினத்தவருக்கான அந்தஸ்தை இழந்துவிடுவதாகவும் எனவே அவரை சாதிப்பெயரை கூறி திட்டியவர்கள் மீது பட்டியலின வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் மனுதாரரின் சாதிச்சான்றை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.