சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு | ’அதிர்ச்சி..’ கொடிமரம் நிறுவியதிலும் திருட்டு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருட்டு வழக்கில், முன்னாள் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் கைதாகியுள்ளனர். மேலும், புதிய கொடிமரம் நிறுவியதிலும் தங்கம் மற்றும் நிதி முறைகேடு நடந்ததாக வழக்கறிஞர் குரூப் வழக்கு தொடர்ந்துள்ளது. கேரள உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி, ஊழல் தடுப்பு குழுவை அமைத்து, 27 பேர் பட்டியலை தயாரித்து விசாரணை துவங்கியுள்ளது.
பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலின் ஐயப்பன் கருவறை முன் உள்ள இரண்டு துவாரபாலகன் சிலைகள் மற்றும் சோபன படிகளில் கடந்த 2019ஆம் ஆண்டு பதிக்கப்பட்ட தங்கத் தகடுகளில், 4 கிலோ தங்கம் மாயமானது.
இந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி., எச்.வெங்கடேஷ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு (SIT) சார்பில் இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் முன்னாள் அதிகாரிகள், தலைவர்கள், தந்திரி என 11 பேர் கைதாகியுள்ளனர்.
இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக, புதிய கொடிமரம் நிறுவியதிலும் கிலோ கணக்கில் தங்கம் கொள்ளை போனதோடு, கோடிக்கணக்கில் நிதி முறைகேடு நடந்ததுள்ளது என்று வழக்கறிஞர் குரூப் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கொடிமரம் நிறுவியதிலும் திருட்டு..
கடந்த 2017ஆம் ஆண்டு சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் சிதிலமடைந்த பழைய கொடிமரம் மாற்றப்பட்டு, புதிய கொடிமரம் நிறுவப்பட்டது தொடர்பான அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய அறிக்கையை குரூப் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். கூடவே, சபரிமலையில் கொடிமரம் நிறுவியது. தொடர்பாக, போலீஸ் சிறப்பு புலனாய்வுக் குழுவும் (SIT) நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது.
இரு அறிக்கைகளையும் ஆய்வு செய்த நீதிமன்றம், கொடிமரம் நிறுவியதில் நன்கொடையாக பெறப்பட்ட தங்கம் மற்றும் நிதியின் புள்ளிவிவரங்களில் முரண்பாடு இருப்பதையும் நன்கொடைகள் பற்றி பதிவேட்டில் எந்த குறிப்பும் இல்லை என்பதையும் கேரள உயர் நீதிமன்ற சபரிமலை சிறப்பு நீதிபதிகள் அமர்வு பெஞ்ச் மதிப்பிட்டது.
வெளிவந்த உண்மை..
இதையடுத்து வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (VACB) 4 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி, விஜிலன்ஸ் குழு கோடிக்கணக்கில் நிதியும் வழங்கியுள்ள 27 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு விஜிலன்ஸ் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால், சுரேஷ்கோபி, திலீப், தேவன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள்,தொழிலதிபர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அந்த 27 பேரிடம் வாங்கிய தங்கம், பணம் ஆகியன குறித்த பதிவேடுகள் மாயமானதையும், அவர்களிடம் இருந்து தங்கம் மற்றும் பணம் பெற்றதற்கு எந்த ரசீதும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதையும் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் 27 பேரில் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து, கொடிமரத்திற்கு நன்கொடையாக வழங்கிய தங்கம் மற்றும் நிதி குறித்து விஜிலன்ஸ் குழு விசாரணையை துவக்க உள்ளது.
27 பேர் தவிர கொடிமரத்திற்கு தங்கம், நிதியாக நன்கொடை வழங்கிய இதர பக்தர்களிடமும் விசாரணை நடத்தப்படும். அவற்றோடு கொடிமரத்திற்கு பயன்படுத்தப்பட்ட தங்கம் மற்றும் நிதியின் கணக்கோடு ஒப்பிட்டு, கொடிமர தங்க கொள்ளை மற்றும் நிதி முறைகேடு குறித்து அடுத்த 30 நாட்களுக்குள் கேரள உயர் நீதிமன்றத்தில் விஜிலன்ஸ் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
எஃப்.ஐ.ஆர் எப்போது..?
அதற்குப்பின் வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை துவக்கப்படும் என விஜிலன்ஸ் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே துவாரபாலகன் சிலைகள் மற்றும் தங்க தகடுகளில் 4 கிலோ தங்கம் மாயமானது தற்போது கொடிமரம் நிறுவியதிலும் தங்க திருட்டு நடந்திருக்கிறது மூலம் தங்க கொள்ளை, நிதி முறைகேடு வழக்கிலும் முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்பதால், இந்த விவகாரம் கேரளாவிற்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

