சபரிமலை வழக்கு.. தங்கத்தைச் ’செப்பு’ எனப் பதிவிட்ட முன்னாள் நிர்வாக அலுவலர் கைது!
சபரிமலை தங்கம் மாயமான வழக்கில், தங்கத்தைச் ’செப்பு’ எனப் பதிவிட்ட முன்னாள் நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019இல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதைச் செப்பனிட்டபின், சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்தபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் இருந்து 4.54 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகி இருந்தது.
இந்த விவகாரம், பக்தர்கள் மற்றும் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கத்தின் எடை குறைந்ததில் உள்ள முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்க, நீதிபதிகள் ராஜா விஜயராகவன்.வி மற்றும் கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, 2019இல் சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகள் மீதான தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகளை தாமிரத் தகடுகளாக தவறாகப் பதிவு செய்ததாக, அப்போதைய நிர்வாக அதிகாரி பி.முராரி பாபுவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு இடைநீக்கம் செய்தது. மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைத்தரகராகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் தேவசம்போர்டு துணை ஆணையர் முராரி பாபு, திருவிதாங்கூர் தேவசம் வாரிய செயலர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ்.பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேவசம் போர்டு அதிகாரிகளே இந்த கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது அம்பலமாகியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் தகடுகள் மாயமான வழக்கில், நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தியும், முராரி பாபுவும் சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், சபரிமலை தங்கம் மாயமான வழக்கில் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். துவாரபாலகர் சிலைகள் தங்க முலாம் பூசப்பட்டவை என்பதை மறைத்து, அதற்குப் பதிலாக கோயிலின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் அவற்றை செப்புத் தாள்களாகப் பதிவு செய்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. துவாரபாலக சிலைகள் தங்கத்தால் வேயப்பட்டிருந்தது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தும், அவை உன்னிகிருஷ்ணன் போத்தியிடம் ஒப்படைத்தபோது, சுதீஷ் குமார் அவற்றை செப்புத் தகடுகளாக ஆவணப்படுத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன்மூலம்தான், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் மூன்றாவது நபராக சுதீஷ்குமார் கருதப்படுகிறார். 2019ஆம் ஆண்டு, சுதீஷ்குமார், தேவஸ்வம் வாரியத்தின் செயல் அலுவலராகப் பணியாற்றியதாகச் சொல்லப்படுகிறது.

