திடீரென்று டெல்லி பறந்த அண்ணாமலை; வெளியான முக்கிய தகவல்!
ஒரு நாள் பயணமாக இன்று காலை திடீரென சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றுள்ள தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் பொழுது தமிழகத்தின் தற்போதைய அரசியல் கள நிலவரம், ஆளுநர் தமிழக அரசு மோதல் விவகாரம், செந்தில் பாலாஜி விவகாரம், தி.மு.க கோப்புகள் இரண்டு வெளியீடு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு பா.ஜ.க. மேற்கொண்டு வரும் தேர்தல் பணிகள், அ.தி.மு.க. கூட்டணி நிலவரம் ஆகியவற்றைப் பற்றியும் நட்டாவிடம் எடுத்துரைத்து அது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், இன்று மாலையே அண்ணாமலை தமிழகம் திரும்ப உள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
வருகிற 28-ஆம் தேதி "என் மண் என் மக்கள்" என்ற தலைப்பில் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்க இருக்கிறார். இதனை மத்திய உள்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியும் மூத்த தலைவருமான அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். அது குறித்தும் இன்றைய ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.