\
SONIA GANDHIS BIOGRAPHY TURN INTO MOVIE
Belonging: The Journey of LovePTI

வெளியான சோனியாவின் சுயசரிதை.. நிர்வாகிகள் எடுத்த அதிரடி முடிவு.. என்ன சொல்லப் போகிறது தலைமை?

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம் வெளியாகி இரு தினங்களே ஆகியிருக்கும் நிலையில், அது திரைப்படமாக உருமாற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. யார் அந்த படத்தை இயக்குகிறார்கள் என்பன உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்...
Published on: 

காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான சோனியா காந்தி நீண்ட நாட்களாக தனது சுயசரிதையை எழுதி வந்தார். கட்சியின் முக்கிய முடிவுகள், எமெர்ஜென்சி காலம், ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம், கூட்டணி விவகாரங்கள், குடும்பப் பூசல்கள், பிரதமர் பதவி என பல முக்கிய விஷயங்கள் குறித்த தனது பார்வையையும், தான் பார்த்த விஷயங்களையும் ’Belonging: The Journey of Lov’e எனும் சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார் சோனியா. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி, மோடி தலைமையிலான அரசாங்கம், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மற்றும் எதிர்க்கட்சிகளின் i-n-d-i-a கூட்டணி ஆகியவற்றைப் பற்றியும் 544 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகம் பேசுகிறது.

ஜக்காரெட்டி, தெலங்கானா காங்கிரஸ் செயல் தலைவர்
ஜக்காரெட்டி, தெலங்கானா காங்கிரஸ் செயல் தலைவர்ANI

இந்நிலையில், இந்த புத்தகத்தைத் தழுவி திரைப்படம் ஒன்று எடுக்கப்பட இருப்பதாக தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ஜக்கா ரெட்டி அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக சங்காரெட்டியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய ஜக்கா ரெட்டி, "கடல் எவ்வளவு ஆழமானதோ, அவ்வளவு ஆழமானது காங்கிரஸ் கட்சி. அதனை சோனியா காந்தி படித்திருக்கிறார். எனவே மக்களிடம் இதை எடுத்துச் செல்ல, அது படமாக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

அதோடு, சங்காரெட்டி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் படத்தைத் தயாரிப்பதற்கு தாமாக முன்வந்து நிதியுதவி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். தேர்தலுக்காக பணம் செலவு செய்வதைப் போன்றே இதையும் ஒரு பொருட்டாகக் கருத வேண்டும் என்றும், திரைப்படத்துக்குத் தேவையான நிதியைத் திரட்டி, ஒரு நல்ல இயக்குநரைத் தேர்வு செய்வோம் என்றும் ஜக்காரெட்டி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜூலகந்தி ஆஞ்சநேயலு, படத்தின் தயாரிப்புக்கு 2 கோடி ரூபாய் வழங்குவதாக உறுதியளித்திருக்கிறார். படத்தின் தயாரிப்புப் பணிகளைத் தொடங்க 50 பேர் கொண்ட குழுவை அமைக்க ஜக்கா ரெட்டி பரிந்துரைத்ததாகவும், இவற்றை அதிகாரி ஒருவர் மேற்பார்வை செய்ய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ரேவந்த் ரெட்டி
ரேவந்த் ரெட்டிani

திரைப்படத்துக்கான ஆரம்பகட்டப் பணிகள் முடிவடைந்த பிறகு, படப்பிடிப்பை முறைப்படி தொடங்கி வைப்பதற்காகத் தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி மற்றும் தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் பி. மகேஷ் குமார் கவுட் ஆகியோரை அழைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஜக்கா ரெட்டி தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் பிறந்த சோனியா காந்தி எப்படி இந்திரா காந்தியின் மருமகளாகி, ராஜீவின் மனைவியாக, பிரியங்கா மற்றும் ராகுலின் தாயாக, பின் கட்சியின் முக்கிய தலைவராக மாறினார் என பல்வேறு காலகட்டங்களை உள்ளடக்கி இந்த படம் இயக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. முன்னதாக, நூலில் சில பகுதிகளை நீக்கினால் மட்டுமே புத்தகத்தை வெளியிடுவோம் என பென்குயின் பதிப்பகம் தெரிவித்திருந்தது. சோனியா அவற்றை நீக்க மறுத்ததால், ஹார்பர்காலின்ஸ் என்ற பதிப்பகத்தின் வாயிலாக சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ’Belonging: The Journey of Love’ நூல் கடந்த 10 ஆம் தேதி வெளியானது. இத்தகைய சூழலில்தான் திரைப்படமாக சோனியாவின் சுயசரிதை வெளியாக முயற்சிகள் எடுக்கப்படுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது..

Belonging: The Journey of Love
Belonging: The Journey of LovePTI

இருப்பினும் தற்போது வரை படத்தை இயக்கப் போவது யார் என தெரிவிக்கப்படாத நிலையில், படத்திற்கு தேசிய தலைவர்களின் அனுமதி கிடைக்குமா?, ஒருவேளை அப்படி கிடைத்தால் யாருக்கு படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பன போன்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. அரசியல் ஆழம் நிறைந்த கதை என்பதைத் தாண்டி, எதிர்க்கட்சியின் முக்கிய தலைவரின் சுயசரிதை என்பதால், யார் இதை இயக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.