“பிம்பம் சிதைந்ததே வாக்குகள் குறைய காரணம்” ஆம் ஆத்மி நிலை குறித்து அன்னா ஹசாரே
டெல்லியில் 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஐந்தாம் தேதி நடந்த தேர்தலில் 60.42 சதவிகித வாக்குகள் பதிவாகின. தேர்தலில் மும்முனை போட்டியாக இருந்தாலும் ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 12 மணி நிலவரப்படி, பாஜக 46 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 24 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங்கை விட 1170 வாக்குகள் பின்னைலையில் இருக்கிறார். 9வது சுற்றின் முடிவில் பர்வேஷ் சாஹேப் 19267 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் 18097 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
இந்நிலையில்தான் டெல்லி தேர்தல் முடிவுகள் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தலில் போட்டியிடுபோது வேட்பாளர்களுக்கு நல்ல குணமும்ம், நல்ல யோசனைகளும் இருக்க வேண்டும். அவரது பிம்பத்தில் எந்தக் குறையும் இருக்கக்கூடாது. இதை நான் நீண்ட காலமாகவே சொல்லி வருகிறேன். ஆனால் ஆம் ஆத்மி கட்சியினருக்கு அது புரியவில்லை.
அவர்கள் பணம் மற்றும் மது விவகாரத்தில் சிக்கிக்கொண்டனர். அதனால்தான் அரவிந்த் கெஜ்ரிவால் பிம்பம் சிதைந்தது. தேர்தலில் வாக்குகள் குறைவாகக் கிடைக்க இதுவே காரணம். அரசியலில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். ஆனால், தான் குற்றவாளி இல்லை என்பதை ஒருவர் நிரூபிக்க வேண்டும். உண்மை உண்மையாகவே இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.