சண்டிகர் தேர்தல் - “கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததால் அப்படி சொல்லிவிட்டேன்” - தேர்தல் அதிகாரி!

கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததால் நீதிமன்றத்தில் சரியான தகவல்களை சொல்ல முடியவில்லை என சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
சண்டிகர் தேர்தல் அதிகாரி - உச்சநீதிமன்றம்
சண்டிகர் தேர்தல் அதிகாரி - உச்சநீதிமன்றம்ட்விட்டர்

கடந்த மாதம் நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பெரும்பான்மை பலம் இருந்தும் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி மேயர் வேட்பாளர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். அதேநேரம் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக, தேர்தல் நடத்தும் அதிகாரியான அணில் மாசி அறிவித்தார்.

பிறகு இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான போது வாக்கு சீட்டுகளை தேர்தல் நடத்தும் அதிகாரி வேண்டுமென்றே சிதைத்தது தெரியவந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான எட்டு வாக்குகளை வேண்டுமென்றே தேர்தல் நடத்தும் அதிகாரி சிதைத்து இருக்கிறார். மேலும் அதனை அவரை ஒப்புக் கொண்டும் இருக்கிறார்” எனக் கூறி தேர்தல் அதிகாரியின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்தார்.

சண்டிகர் தேர்தல் அதிகாரி - உச்சநீதிமன்றம்
”தேர்தல் அதிகாரி செய்தது மிகப்பெரிய தவறு”-சண்டிகர் மேயர் தேர்தல்முடிவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார் என தீர்ப்பு வழங்கியதோடு “முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?” என விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்து இருந்தார்.

இந்நிலையில் இந்த நோட்டீஸிற்கு பதில் அளித்துள்ள தேர்தல் நடத்திய அணில் மாசி, “8 வாக்குகளையும் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள்தான் சிதைத்தார்கள். உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது அங்கு இருந்த சூழல் மற்றும் பிற விஷயங்களால் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டது. அதனால் இந்த விஷயத்தை சொல்ல முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் தேர்தல் தொடர்பான வீடியோ வெளியானதற்கு பிறகுதான் தான் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கு இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com