தீ விபத்தில் சிக்கிய மகன்.. திருப்பதியில் முடி காணிக்கை செய்த பவன் கல்யாண் மனைவி!
ஆந்திரப் பிரதேச துணை முதல்வராக இருப்பவர், பவன் கல்யாண். இவருடைய மனைவி அன்னா கொனிடேலா. இவர்களின் மகன் மார்க் சங்கர். இவர், சிங்கப்பூரில் ஒரு கோடைக்கால முகாமில் சமீபத்தில் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் அவரது கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டன. மேலும், புகைமூட்டம் அதிகரித்த நிலையில், அந்தப் புகையை சுவாசித்ததால் சங்கருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பவன் கல்யாணும் சிங்கப்பூர் சென்று தனது மகனைப் பார்த்தார். இந்த நிலையில், தன் மகன் குணமாக வேண்டி திருப்பதி ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செய்வதாக அன்னா கொனிடேலா வேண்டியிருந்தார். இதை நிறைவேற்றும் வகையில், நேற்று கோயிலுக்குச் சென்ற அன்னா, அங்கு முடி காணிக்கை செய்தார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) விதிகளின்படி, ரஷ்ய மரபுவழி கிறிஸ்தவரான அன்னா கொனிடேலா, கோயில் அதிகாரிகள் முன்னிலையில், வெங்கடேஸ்வரர் மீது தனது நம்பிக்கையை அறிவித்து, சடங்குகளில் பங்கேற்பதற்கு முன்பு பிரகடனப் படிவங்களில் கையெழுத்திட்டதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.