’குரோர்பதி' நிகழ்ச்சியால் புகழ்பெற்ற பெண் வட்டாட்சியர்.. ஊழல் வழக்கில் கைது!
2021இல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகையை போலி வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி முறைகேடு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கோன் பனேகா குரோர்பதி (KBC) நிகழ்ச்சியில் பங்கேற்றதால் புகழ்பெற்ற பெண் வட்டாட்சியர் அமிதா சிங் தோமர், இரண்டரை கோடி ரூபாய் வெள்ள நிவாரண மோசடி வழக்கில் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த அமிதா சிங் தோமர் கடந்த 2019-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.50 லட்சம் பரிசு வென்றிருந்தார்.
மத்திய பிரதேச மாநில அரசில் விஜய்பூர் தாசில்தாராக பணியாற்றி வருகிறார் இவர். கடந்த 2021-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ள நிவாரண நிதியை அரசு வழங்கியது. அந்த நிதியை பரோடா பகுதியில் விநியோகம் செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. ரூ.2.5 கோடி பணம் போலியான வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், குவாலியரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். இந்த ஊழல் தொடர்பாக ஏற்கெனவே 22 வருவாய்த் துறை அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமிதா சிங் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமிதா சிங் தோமர் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர் தாசில்தார் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று மாவட்ட ஆட்சியர் அர்பித் வர்மா தெரிவித்துள்ளார்.

