காங்கிரஸ் - பாஜக இடையே உடன்பாடு ? நாடாளுமன்றத்தில் கொந்தளித்த அகிலேஷ்!!
நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் டெல்லியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் டெல்லி போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை கொடூரமாக தாக்கிய விடீயோக்கள் வெளியாகி இந்தியாவையே உலுக்கியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
அதன்படி நாடாளுமன்றத்தில் மாணவர்களின் நீட் தொடர்பான போராட்டம் விவாதிக்கப்பட்டு வருகிறது. அப்போது பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ, மாணவர்கள் போராட்டம் தொடர்பாக எப்படி விவாதம் நடத்துவது என்பது பற்றி அனைத்து கட்சித் தலைவர்களையும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என்று கூறினார்.
இதனிடையே சமாஜ்வாதி கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் இது விவகாரம் குறித்து பேச முயன்றபோது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவரான கே.சி.வேணுகோபால் பேச நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் ஆவேசமடைந்த அகிலேஷ் யாதவ், மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரம் காங்கிரஸ் மற்றும் பாஜக சம்மந்தப்பட்டது அல்ல என்றும், நீங்கள் எங்களை பேச அனுமதிக்காமல் காங்கிரஸ் கட்சியினரை மட்டுமே அனுமதிக்கிறீர்கள், இது தொடர்பாக பாஜகவுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் உடன்பாடு ஏதும் உள்ளதா என கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா, அகிலேஷ் யாதவ்வுக்கு பேச அனுமதி அளித்ததால் அவர் தனது கருத்தை நிறைவு செய்தார். எனினும் இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக உள்ள சமாஜ்வாதி தலைவர் நாடாளுமன்றத்திலேயே பாஜகவுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் உடன்பாடு ஏதும் உள்ளதா என்று கேட்டது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அங்கு கூடுதல் இடங்களை தரவேண்டும் என தற்போதில் இருந்தே சமாஜ்வாதி கட்சியிடம் வலியுறுத்தி வருகிறது. இதனால் இரு கட்சிகள் இடையே சலசலப்பு நிலவி வரும் நிலையில், அகிலேஷின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

