2024-ல் மட்டும் விமானங்களுக்கு 728 வெடிகுண்டு மிரட்டல்கள்.. மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி தகவல் !
விமானங்களுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக இமெயில் உள்ளிட்டவை வழியாக மிரட்டல் விடுக்கப்படுவதும், பின்னர் விசாரணையில் அது வதந்தி என தெரிய வருவதும் ஆன சம்பவங்கள் சமீப காலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விமானங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து இதுவரை இல்லாத அளவாக கடந்த ஓர் ஆண்டில் மட்டும் விமானங்களுக்கு 728 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு மக்களவையில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினர் கோவிந்த் மக்தப்பா கர்ஜோல், கடந்த சில ஆண்டுகளில் விமானங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து எழுத்து பூர்வமாக கேள்வியை எழுப்பி இருந்தார்.
இதற்கு, பதிலளித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மோகல், 2022 முதல் 2025 ஜூலை 20ம் தேதி வரை 881 வெடிகுண்டு மிரட்டல்கள் விமான நிலையங்கள் மற்றும் விமானங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுவரை இல்லாத அளவாக கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் 728 வெடிகுண்டு மிரட்டல்கள் விமானங்களுக்கு விடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
4 ஆண்டுகள் விவரம்:
2022 - 13
2023 - 71
2024 - 728
2025 - 69 ( ஜூலை வரை)
மொத்தம் - 881 (2022 - 2025)
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமான பயணத்தில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலை நிறுத்துவதற்கு தேவையான அறிவுரைகளை நாட்டில் உள்ள சிவில் விமான பங்குதாரர்களுக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.