சர்வதேச பயணிகளுக்கு ஒரு Good நியூஸ்.. பெருமளவு கட்டணத்தைக் குறைத்த ஏர் இந்தியா!
குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார்.
அகமதாபாத் விமான விபத்து சம்பவமே இன்னும் மக்களைவிட்டு விலகாத நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விமானம் குறித்த அசெளகர்ய தகவல்கள் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த ஜூன் 17ஆம் தேதி மட்டும் ஏர் இந்தியாவின் ஆறு சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த ஆறு நாட்களில் மட்டும் 83 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அகமதாபாத் விமான விபத்தினைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்களில் வெளிநாட்டுப் பயணங்களுக்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வேகமாக குறைந்து வருவதாக ’பிசினஸ் டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனம் சர்வதேச விமானக் கட்டணங்களைக் குறைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் இருந்து பாரிஸ் செல்வதற்கு ஏர் இந்தியா விமானத்தில் 31,000 ரூபாய் மட்டுமே பயணக் கட்டணமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவே பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான ஏர் பிரான்ஸ் விமானத்தில் செல்வதற்கு 64,000 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். அதேபோல், டெல்லி-நியூயார்க் வழித்தடத்தில், ஏர் இந்தியாவின் கட்டணம், அமெரிக்கன் ஏர்லைன்ஸைவிட 25% குறைக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி- சிகாகோ வழித்தடத்திலும் (ஒரு போயிங் 777 ஆல் இயக்கப்படுகிறது) ஏர் இந்தியாவின் டிக்கெட் கட்டணம் கிட்டத்தட்ட 30% குறைவாக உள்ளது.
மேலும், ஏர் இந்தியா விமானத்தில் டெல்லியில் இருந்து ஆம்ஸ்டர்டாம் செல்வதற்கான டிக்கெட் கட்டணம் 26,200 ரூபாயாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதுவே மற்ற சர்வதேச விமானச் சேவை நிறுவனங்கள் 66,000 ரூபாயை கட்டணமாக விதிக்கின்றன. டெல்லியில் இருந்து ஹாங்காங் செல்வதற்கு ஏர் இந்தியா விமானத்தில் 13,000 ரூபாய்க்கு டிக்கெட்டை வழங்குகிறது. ஆனால் கேத்தே பசிபிக் விமானங்கள், இதைவிட மூன்று மடங்கு அதிகமாக கட்டணம் வசூல் செய்கிறது. அதேபோல டெல்லியில் இருந்து டோக்கியோவுக்கு செல்வதற்கு ஏர் இந்தியா விமானம் 37,500 ரூபாய் என வெகுவாக குறைத்திருக்கிறது. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் இதே பயணத்திற்கு 52 ஆயிரம் ரூபாயை கட்டணமாக வசூல் செய்கிறது. அகமதாபாத் விமான விபத்தில் சிக்கியது ஏர் இந்தியாவின் 787 போயிங் ரக விமானம்தான். இதையடுத்தே, அவ்வகையான விமானங்களைப் பயன்படுத்தி எந்த நாடுகளுக்கு எல்லாம் அவை செல்கிறதோ, அந்த நாடுகளுக்கான டிக்கெட் கட்டணத்தைப் பாதிக்கும் கீழ் குறைத்துள்ளது. இந்த அதிரடி விலை குறைப்பால் மீண்டும் ஏர் இந்தியாவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.