இன்னும் அதிர்ச்சி மீள்வதற்குள்.. இன்று ஒரேநாளில் ஏர் இந்தியாவின் 6 விமானங்கள் ரத்து!
குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். அகமதாபாத் விமான விபத்து சம்பவமே இன்னும் மக்களைவிட்டு விலகாத நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விமானம் குறித்த அசெளகர்ய தகவல்கள் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் இந்தப் பயங்கர விபத்திற்குப் பிறகு போயிங் நிறுவனத்தின் முதன்மை விமானங்கள் மீது கண்காணிப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒருசில காரணங்களால் இன்று மட்டும் ஏர் இந்தியா ஆறு சர்வதேச விமானங்களை ரத்து செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இவ்வனைத்தும் 787-8 ட்ரீம்லைனரைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில், டெல்லியிலிருந்து துபாய்க்குச் செல்லவிருந்த AI 915 என்ற விமானமும், டெல்லியிலிருந்து வியன்னாவிற்குச் செல்லவிருந்த AI 153 என்ற விமானமும், டெல்லியிலிருந்து பாரிஸுக்குச் செல்லவிருந்த AI 143 என்ற விமானமும், அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் செல்லவிருந்த AI 159 என்ற விமானமும், பெங்களூருவிலிருந்து லண்டனுக்குச் செல்லவிருந்த AI 133 என்ற விமானமும் மற்றும் லண்டன் டூ அமிர்தசரஸின் AI170 என்ற விமானமும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இவை தவிர, டெல்லிக்கு AI 315 ஆக இயங்கும் ட்ரீம்லைனர் என்ற விமானமும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஹாங்காங்கிற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும், இன்று அதிகாலை, கொல்கத்தாவில் திட்டமிடப்பட்ட நிறுத்தத்தின்போது ஏர் இந்தியா சான் பிரான்சிஸ்கோ-மும்பை விமானமும் தொழில்நுட்பக் கோளாறைச் சந்தித்தது, இதனால் விமான நிறுவனம் அனைத்து பயணிகளையும் இறக்கிவிட்டது. மேலும், பிராங்பேர்ட் மற்றும் லண்டனில் இருந்து ஹைதராபாத் மற்றும் சென்னைக்கு பறக்கும் லுஃப்தான்சா மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் இயக்கப்படும் இரண்டு ட்ரீம்லைனர்கள், அவற்றின் சொந்த விமான நிலையங்களுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.