ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளில் 100 பாதுகாப்புக் குறைபாடுகள்.. தணிக்கையில் தகவல்!
விபத்து தொடர்பாக புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை
குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். மொத்தம் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், இந்த விமான விபத்து தொடர்பாக புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தியது.
அதன்படி, இதன் முதற்கட்ட விசாரணை அறிக்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது. ’இரண்டு என்ஜின்களுக்கான எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள், 1 வினாடி இடைவெளியில், உயரத்தில், ஒன்றன்பின் ஒன்றாக கட்ஆஃப் நிலைக்கு நகர்த்தப்பட்டுள்ளது’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அதுதொடர்பான விமர்சனங்களும் எழுந்தன.
ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளில் 100 பாதுகாப்புக் குறைபாடுகள்
இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளில் 100 பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக தணிக்கையில் தெரியவந்துள்ளது. அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து இம்மாத தொடக்கத்தில் அந்நிறுவன செயல்பாடுகள் குறித்து மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தணிக்கை நடத்தியது. இத்தணிக்கையில் 100 குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 7 குறைபாடுகள் மிகவும் தீவிரமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் மையமாக உள்ள குருகிராமில் ஜூலை 1 முதல் ஜூலை 4 வரை இத்தணிக்கை நடைபெற்றது. 10 DGCA ஆய்வாளர்கள் மற்றும் நான்கு கூடுதல் தணிக்கையாளர்களால் நடத்தப்பட்ட இந்த தணிக்கை, பல பகுதிகளில் முக்கியமான செயல்பாட்டு இடைவெளிகளைக் கண்டறிந்தது. அடையாளம் காணப்பட்ட பல மீறல்கள் 'நிலை 1' பாதுகாப்பு வகைப்பாட்டின்கீழ் வருகின்றன. அவை பாதுகாப்பான விமான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கு உடனடி திருத்த நடவடிக்கைகள் தேவைப்படும் முக்கியமான குறைபாடுகளாகக் கருதப்படுகின்றன.
கதவு மற்றும் உபகரண சோதனைகளில் முரண்பாடுகள்
சவாலான C வகை விமான நிலையங்களுக்கான சரியான வழித்தட மதிப்பீடுகளை ஏர் இந்தியா மேற்கொள்ளத் தவறிவிட்டது என்றும், பயிற்சிக்கான தகுதித் தரங்களை பூர்த்தி செய்யாத சிமுலேட்டர்களைப் பயன்படுத்தியது என்றும் தணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் பாதுகாப்பு குறைபாடுகளில் கதவு மற்றும் உபகரண சோதனைகளில் முரண்பாடுகள், பயிற்சி ஆவணங்களில் உள்ள இடைவெளிகள் மற்றும் ஏர்பஸ் A320 மற்றும் A350 விமானங்களுக்கு தலைமை விமானிகள் இல்லாதது ஆகியவை அடங்கும்.
தணிக்கையில் வெளியான இத்தகைய பாதுகாப்புக் குறைபாடுகளை ஏர் இந்தியா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதுகுறித்து அது, "முற்றிலும் வெளிப்படையானது. தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்ட திருத்த நடவடிக்கைகளின் விவரங்களுடன், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் நாங்கள் பதிலை சமர்ப்பிப்போம்" எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக விமான விபத்தைத் தொடர்ந்து, அனைத்து போயிங் 787 விமானங்களிலும் கட்டாய பாதுகாப்புச் சோதனைகளை டிஜிசிஏ மேற்கொண்டது. மேலும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இரண்டிலும் அதிகரித்து வரும் சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்தது. அதன் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்ய விமான நிறுவனத்திற்கு ஒரு மாத கால அவகாசம் அளித்திருந்தது.
கட்ந்த ஆண்டு 11 வழக்குகளைச் சந்தித்த ஏர் இந்தியா
விமான கண்காணிப்பு வலைத்தளமான Flightradar24இன்படி, ஏர் இந்தியா 34 போயிங் 787 விமானங்களையும் 23 போயிங் 777 விமானங்களையும் இயக்குகிறது. 2022ஆம் ஆண்டு டாடா குழுமத்தால் வாங்கப்பட்ட பிறகு, இந்த விமான நிறுவனம் அதன் சர்வதேச வலையமைப்பை தீவிரமாக விரிவுபடுத்தியுள்ளது. ஆனால் விமான பராமரிப்பு மற்றும் கேபின் நிலைமைகள் குறித்து பயணிகளின் புகார்களை அது தொடர்ந்து எதிர்கொள்கிறது.
கடந்த ஆண்டு, விமானப் போக்குவரத்து அதிகாரிகள் 23 வழக்குகளில் விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கைகள் அல்லது அபராதங்களை விதித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 11 வழக்குகளில் ஏர் இந்தியா குழுமம் சம்பந்தப்பட்டது. சர்வதேச விமானங்களின் போது, விமானத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாததற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதம் 1,27,000 டாலர் ஆகும்.