விமான விபத்து | சட்ட விளக்கம் இல்லாத ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதா ஏர் இந்தியா?
குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியும் ஏஏஐபி வசம் உள்ளது. இடையில் அதில் இருக்கும் டேட்டாவை எடுக்க அது வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவதாகத் தகவல் வெளியானது.
இருப்பினும், அதை மறுத்துள்ள மத்திய அரசு, உள்நாட்டிலேயே விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது. இதற்கிடையே நாசவேலை உட்பட அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளீதர் மொஹோல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை, ஜூலை 11ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த ஃப்ளைட் சிமிலேட்டர் (Flight Simulator) சோதனையில், விமானத்தின் இரண்டு இன்ஜின்களும் செயலிழந்ததால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்ற கருத்துக்கு வலுவூட்டும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களை, விசாரணை மற்றும் நிவாரணம் பெறுவதற்காக சட்ட விளக்கம் இல்லாத ஆவணங்களில் கையெழுத்திட வற்புறுத்தியதாக ஏர் இந்தியா மீது கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரிட்டனில் உள்ள STEWARTS LAW நிறுவனத்தின் முக்கிய வழக்கறிஞரான பீட்டர் நீனன் இவ்வாறு கூறியுள்ளார்.
அந்த ஆவணங்களில் கையெழுத்திட்டால், எதிர்காலத்தில் விமான நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத வகையில் சட்டத் தடைகள் இருந்ததாகவும், இதை ஆழமாக விளக்காமல், உடனடி நிவாரணத்துக்காக குடும்பங்களை அழுத்தம் தந்து கையெழுத்து வாங்கியதாகவும் பீட்டர் நீனன் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை முற்றிலும் மறுத்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், எந்தவித வலுக்கட்டாய முறைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும், இது ஒரு வழக்கமான நிவாரண நடைமுறை என்றும் தெரிவித்துள்ளது.