“எல்லாம் நெல்லிக்காய் மூட்டைகள்; எப்போது வேண்டுமானாலும் தமிழகத்திலும் சிதறும்” ஜெயக்குமார்

“அகில இந்திய அளவில் நிதிஷ்குமார் விலகும் போது தமிழகத்திலும் அத்தகைய சூழல் ஏற்படும்” - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஜெயக்குமார், I.N.D.I.A கூட்டணி
ஜெயக்குமார், I.N.D.I.A கூட்டணிpt web

பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து மீண்டும் வெளியேறுவார் என வதந்தி பரவிய நிலையில், இன்று பிகார் மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இதன் பின் பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜினாமா செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ்குமார், “ராஜினாமா செய்துவிட்டேன். பல்வேறு தரப்பிடம் வந்த கோரிக்கையின் அடிப்படையிலும், அரசியல் சூழல் காரணமாகவும் லாலுவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறினேன். லாலு காங்கிரஸ் உடனான மகா கூட்டணி ஆட்சி முறிந்துவிட்டது. விரைவில் புதிய கூட்டணியை அமைப்பேன். பாஜக உடனான கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் 4 ஆவது முறையாக கூட்டணியை மாற்றியுள்ளார் நிதிஷ்குமார்.

இந்நிலையில் புதிய தலைமுறையிடன் தனது கருத்துக்களை பிரத்யேகமாக பகிர்ந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இண்டியா கூட்டணி என்பது கொள்கையின் அடிப்படையில் உருவானது கிடையாது. கொள்கையின் அடிப்படையில் உருவான கூட்டணிதான் நீடித்து இருக்கும். நான் ஏற்கனவே சொன்னதுபோல் தான். அனைத்தும் நெல்லிக்காய் மூட்டைகள். எப்போது வேண்டுமானாலும் சிதறுவதற்கான வாய்ப்பு INDIA கூட்டணியில் இருக்கிறது.

தமிழ்நாட்டிலும் திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் கூட்டணி அமைத்துள்ளன. அனைத்தும் முரண்பாடுகளுடன் உள்ளது. எனவே தேர்தல் நெருங்க நெருங்க எங்களுக்கு எல்லாம் சாதகமான அம்சமும் உருவாகின்றன. வடக்கு வேறு தெற்கு வேறு. தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது.

அகில இந்திய அளவில் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு நிதிஷ்குமார் தனியாக வரும்போது, தமிழ்நாட்டிலும் அத்தகைய சூழல் வரும் வாய்ப்புகள் உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க எதிரிகளும் இல்லை நண்பர்களும் இல்லை. தேர்தல் நெருங்க அரசியல் மாற்றங்கள் வரும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com