
உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பல ஆண்டுகள் செயல்பட்டு வரும் இந்திரா ஜெய்சிங் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பல வழக்குகளில் ஆஜராகி இருக்கிறார்.
கடந்த சில தினங்கள் முன் பெண்களை மரியாதைக் குறைவாக நடத்தும் சில வார்த்தைகளுக்கு நீதிமன்றம் கட்டுப்பாட்டினை விதித்தது. புதிய வார்த்தைகள் அடங்கிய கையேடினையும் (ஹேண்ட் புக் ஆன் காம்பேட்டிங் ஜெண்டர் ஸ்டீரியோடைப்ஸ்) உச்சநீதிமன்றம் வெளியிட்டது. வார்த்தைகளை ஏன் மாற்ற வேண்டும், அதற்கு பதிலாக என்ன வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது குறித்து பேசிய நீதிபதி சந்திரசூட், கடந்த காலங்களில் தீர்ப்புகளில் பெண்களைக் குறிக்க உபயோகப்படுத்திய வார்த்தைகள் முறையற்றவை என்றும் நீதிமன்றங்களை விமர்சிக்க இந்த கையேடு வெளியிடப்படவில்லை என்றும் வார்த்தைகள் கவனக் குறைவாக கையாளப்படுவதை சுட்டிக்காட்டவே இது வெளியிடப்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் எழுதியுள்ள கடிதத்தில், சமீபத்தில் நீதிபதிகள் பாலியல் வன்கொடுமை வரதட்சணை கொடுமை உள்ளிட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கும்போது பெண்களை கண்ணியக் குறைவாக குறிப்பிடும் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியதோடு எத்தகைய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அடங்கிய குறிப்புகளை வெளியிட்டதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் நீதிமன்றவாதங்களின் போது பெண் வழக்கறிஞர்களை சக ஆண் வழக்கறிஞர்கள் பல நேரங்களில் மரியாதை குறைவாக நடத்துவதாகவும் இதுகுறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.