தொடர் தோல்வி.. திருச்சூரில் மீண்டும் சீட்.. குறிவைத்த பாஜக.. யார் இந்த சுரேஷ் கோபி?

கேரளாவில் உள்ள திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபிக்கு பாஜக மீண்டும் சீட் வழங்கியுள்ளது.
பாஜக, சுரேஷ் கோபி
பாஜக, சுரேஷ் கோபிட்விட்டர்

195 தொகுதிகளுக்கு முதற்கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான வேலைகளில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. அந்த வகையில் எல்லாக் கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்து தொகுதிகளைப் பிரித்து வருகின்றன. இந்த நிலையில், மத்தியில் ஆளும் பாஜக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று (மார்ச் 2) வெளியிட்டுள்ளது.

195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 47 இளைஞர்களுக்கும், 28 பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 34 மத்திய அமைச்சர்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள் இரண்டு பேரும் பட்டியலில் உள்ளனர். இந்த பட்டியலின்படி, பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் இருந்தும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கோட்டா தொகுதியில் இருந்தும் போட்டியிடுகின்றனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா காந்திநகரில் இருந்தும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.

நடிகர் சுரேஷ் கோபிக்கு மீண்டும் திருச்சூர் தொகுதி

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்தப் பட்டியலில், திரை நட்சத்திரங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. நடிகை ஹேமமாலினி மதுரா தொகுதியில் இருந்து 3-வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். நடிகர் மனோஜ் திவாரி வடகிழக்கு டெல்லி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். நடிகர் சுரேஷ் கோபி கேரளாவின் திருச்சூர் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். நடிகை லாக்கெட் சாட்டர்ஜி ஹூக்ளி தொகுதியில் இருந்தும், நடிகர் ரவி கிஷன் கோரக்பூர் தொகுதியில் இருந்தும் போட்டியிடுகின்றனர். இவை தவிர, நடிகர் அக்சய் குமாருக்கு சாந்தினி சவுக் தொகுதியும், நடிகை கங்கனா ரனாவத்துக்கு மண்டி தொகுதியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரை நட்சத்திரம் மற்றும் பிரபலங்களைக் குறிவைக்கும் பாஜக

எதிர்க்கட்சிகள் வாக்குச் சதவிகிதத்தில் பலமாக உள்ள தொகுதிகளில் பிரபலங்கள் அல்லது சினிமா நட்சத்திரங்களைக் களமிறக்குவதை பாஜக குறியாக வைத்துள்ளது. அந்த அடிப்படையிலேயே அக்கட்சியில் இணையும் திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்களுக்கு எம்.பி. சீட்டுகளை வழங்கி, தம் கட்சியில் ஐக்கியமாக்குவதுடன், அவர்களைவைத்து அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்குச் சதவிகிதத்தைப் பெறுவதில் முயற்சி செய்து வருகிறது. அதன்காரணமாக திரை நட்சத்திரம் மற்றும் பிரபலங்களுக்கு சீட்களை ஒதுக்கிவருகிறது. அந்த வகையில், தற்போதும் திரை நட்சத்திரங்களுக்கு சீட்கள் ஒதுக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். இந்தச் சூழலில் கேரளாவில் பிரபல நடிகர் சுரேஷ் கோபிக்கு மீண்டும் சீட் வழங்கியிருப்பதுதான் பேசுபொருளாகி உள்ளது. வடமாநிலங்களில் வலுவாக உள்ள பாஜக, தென்மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க பல வருடங்களாகவே முயன்று வருகிறது. இதற்கான ஆயுதம்தான் திரை நட்சத்திரம்.

சுரேஷ் கோபிக்கு மீண்டும் சீட் வழங்கியது ஏன்?

பாஜக இதுவரை மிகப்பெரிய அளவில் வெற்றிபெறாத மாநிலம் கேரளா. 2019ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததுதான் பெரிய விஷயமாக உள்ளது. இதனால், இந்த முறையும் கேரளாவில் 2-3 இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளில் பாஜக அதற்கான காய்களை நகர்த்திவருகிறது. அந்த வகையில் சுரேஷ் கோபியை மீண்டும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் களமிறக்கியுள்ளது. அவரை இதே பாஜக அரசு, கடந்த 2016ஆம் ஆண்டு மாநிலங்களவை எம்.பியாகத் தேர்வு செய்தது.

இதையடுத்து, அந்த ஆண்டின் பிற்பகுதியில் பாஜகவிலும் அவரும் ஐக்கியமானார். இதைத் தொடர்ந்து கடந்த 2019-ல் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் அவர் வேட்பாளராய் நிறுத்தப்பட்டபோதும் தோல்வியையே தழுவினார். அடுத்து, 2021-ல் சட்டசபைத் தேர்தலிலும் பாஜக சார்பில் களமிறங்கியும் அவருக்கு தோல்வியே மிஞ்சியது.

எனினும், அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத பாஜக தலைமை, இந்த முறை அவரைவைத்தே வாக்கு வங்கியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்பயனாகவே சுரேஷ் கோபியைக் களமிறக்கியுள்ளது. அதுமட்டுமல்ல, சுரேஷ் கோபிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், பிரசாரங்களிலும் அவரை வலுவாகப் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் பாஜக கணக்கு போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கணிசமான வாக்கு வங்கியைக் கையில் வைத்திருக்கும் சுரேஷ் கோபி, இந்த முறை பாஜகவின் நம்பிக்கையைப் பெறுவார் எனக் கூறப்படுகிறது. அதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. நாயர் சமூகத்தைச் சேர்ந்தவரான சுரேஷ் கோபி, அச்சமூக ஓட்டுகளை இந்த முறை அறுவடை செய்வார் என்றும் அதற்கான காய்நகர்த்தலை எப்போதே ஆரம்பித்துவிட்டார் என்றும் கேரள பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

யார் இந்த சுரேஷ் கோபி?

பிரபல மலையாள நடிகராக அறியப்பட்ட சுரேஷ் கோபி, நடிகர் அஜித் குமார் நடித்த ’தீனா’ படத்தில் அஜித்துக்கு அண்ணனாக தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதற்குப் பிறகு, ஐ, தமிழரசன் உட்பட சில படங்களிலும் அவர் நடித்துள்ளார். கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம், பெண் பத்திரிகையாளர் ஒருவரின் தோளில் கைவைத்தபடி பேசியதும், 2019-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைச் சுரேஷ் கோபி தொட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயங்களுக்காக அவர் மன்னிப்பும் கேட்டார். அதேபோல் கடந்த காலங்களில், ’பூணூல் அணியும் சமூகத்தில் பிறக்க வேண்டும்’, ’மத நம்பிக்கை அற்றவர்கள் மொத்தமாக அழிய வேண்டும் என்றும் அதற்காக கோயிலில் நான் பிரார்த்திப்பேன்’ என்று சர்ச்சையாக அவர் பேசியிருந்ததற்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com