‘ஒரேநாடு ஒரே தேர்தல்’- மம்தா, கார்கே வரிசையில் இணைந்த ஆம் ஆத்மி

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி தனது கடுமையான கண்டனத்தை கடிதம் வாயிலாக பதிவு செய்துள்ளது.
ஆம் ஆத்மி
ஆம் ஆத்மிpt web

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை பாஜக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. 1967-ஆம் ஆண்டுவரை இந்த நடைமுறை தொடர்ந்தது என்றாலும் பல்வேறு காரணங்களால் அது கைவிடப்பட்டது. அதை மீண்டும் செயல்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் எதுவும் கைகூடவில்லை. தற்போது மீண்டும் பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை உயர்த்திப் பிடிக்கிறது.

இதற்கென முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயநிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாத தொடக்கத்தில் அமைக்கப்பட்ட இக்குழுவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் போன்றோரும் இடம்பெற்றிருந்தனர். இக்குழு சில கூட்டங்களையும் நடத்தியது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிpt web

மேலும் இது குறித்து கருத்துகளை தெரிவிக்குமாறு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளுக்கு, கடிதத்தையும் இக்குழு எழுதி இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பதிலளித்து வருகின்றனர்.

கடந்த வாரம் உயர்நிலைக் குழுவின் செயலர் நிதின் சந்திராவிற்கு கடிதம் எழுதிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “உங்கள் உருவாக்கம் மற்றும் முன்மொழிவுடன் நாங்கள் உடன்படவில்லை” என தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் ஜனவரி 17-ஆம் தேதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக்குழுவிற்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், தேர்தல் செலவுகள் அதிகமாகவுள்ளது என்று கூறப்படுவது ஏற்புடையது அல்ல, மத்திய அரசின் ஒவ்வொரு 5 ஆண்டுகால பட்ஜெட்டிலும் தேர்தல் செலவினம் என்பது 0.02%க்கும் குறைவானதுதான்.

மல்லிகார்ஜூன கார்கே
மல்லிகார்ஜூன கார்கே

தேர்தல் நேரத்தில் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்படும் என்பதும் ஏற்புடையது அல்ல. ஏற்கெனவே தொடங்கப்பட்ட பணிகள் தேர்தல் காலங்களிலும் தொடர்ந்து நடந்தவண்ணம்தான் உள்ளன. நாடுமுழுவதும் ஒரேநாடு , ஒரே தேர்தல் நடத்துவது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியும் உயர்நிலைக்குழுவிற்கு தனது கடிதத்தை எழுதியுள்ளது. ஜனவரி 18-ஆம் தேதி உயர்மட்ட குழுவின் செயலாளர் நிதின் சந்திராவிற்கு அக்கட்சி எழுதியுள்ள கடிதத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு தனது கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது.

ஆம் ஆத்மி எழுதிய கடிதத்தில், “ஒரு நாடு ஒரே தேர்தல் என்ற கருத்தை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இது நாடாளுமன்ற ஜனநாயகம், அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் நாட்டின் கூட்டாட்சி அரசியலை சேதப்படுத்தும். கட்சித்தாவல் எதிர்ப்பு மற்றும் எம்.எல்.ஏ/எம்.பி.க்களை வெளிப்படையாக விலைக்கு வாங்குதலை தீவிரமாக ஊக்குவிக்கும். ஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்கள் மூலம் மிச்சப்படுத்தப்படும் செலவு இந்திய அரசாங்கத்தின் ஆண்டு பட்ஜெட்டில் 0.1% மட்டுமே” என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com