ஜூலை 21 மழைக்கால கூட்டத் தொடர்.. I-N-D-I-A கூட்டணியிலிருந்து வெளியேறிய ஆம் ஆத்மி!
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்கள் குழு அளித்த பரிந்துரையை ஏற்று மழைக்கால கூட்டத்தொடர் தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் எது குறித்து பேச விரும்பினாலும் வரும் மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்க தயார் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க வேண்டியுள்ளதால், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கோரி, ‘I-N-D-I-A’ கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதின. ஆனால் I-N-D-I-A கூட்டணியில் அங்கம் வகித்து வந்த ஆம் ஆத்மி கட்சி, இந்த கடிதத்தில் கையெழுத்திடவில்லை. அதனால் ஆம்ஆத்மி கட்சி அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக ஆம்ஆத்மி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆம் ஆத்மி கட்சி, I-N-D-I-A கூட்டணியைவிட்டு வெளியேறிவிட்டது. இனிமேல் ஆம்ஆத்மி கட்சி தனித்துச் செயல்பட முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. பாஜகவும், காங்கிரஸும் தான் மறைமுகமாக இணைந்து செயல்படுகின்றன. இக்கட்சிகள் மறைமுக கூட்டணியில் உள்ளன. 2024 மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே, I-N-D-I-A கூட்டணி எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்டது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி மூத்த தலைவர் அனுராக் தண்டா வெளியிட்டுள்ள பதிவில், ”பாஜகவும் காங்கிரஸும் மறைமுகமாக இணைந்து செயல்படுகின்றன. பிரதமர் மோடிக்கு அரசியல் ரீதியாக பயனளிக்கும் விஷயங்களை மட்டுமே ராகுல் காந்தி பேசுகிறார். அதற்கு பதிலாக, சோனியா காந்தி குடும்பத்தை சிறையில் இருந்து மோடி காப்பாற்றுகிறார். ஆனால் இனி வரும் அனைத்து மாநிலத் தேர்தல்களிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும்” எனத் தெரிவித்துள்ளார்.