நேபாளம் பேரிடர்| 5 உயிர்களை காப்பாற்றிய Tea break.. மரணத்தை வென்ற இந்தியர்கள்!
நேபாளத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டபோது, சத்தீஸ்கரிலிருந்து சுற்றுலா வந்த ஐந்து நண்பர்கள் மாலேகு பகுதியில் எடுத்த சிறிய டீ இடைவேளையால் உயிர் தப்பினர். அவர்கள் 10-15 நிமிடங்கள் முன்பே பாலம் கடந்து இருந்தால் வெள்ளத்தில் சிக்கியிருப்போம் என கூறுகின்றனர்.
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், சத்தீஸ்கரைச் சேர்ந்த 5 நண்பர்கள் ஒரு சிறிய Tea break எடுத்ததால் உயிர் தப்பியுள்ளனர். அந்த இடைவேளை எடுக்காமல் அவர்கள் சுமார் 10 அல்லது 15 நிமிடங்கள் முன்னதாக அங்கிருந்து புறப்பட்டிருந்தால், வெள்ளத்தில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ராய்ப்பூரின் மனா கேம்ப் பகுதியைச் சேர்ந்த நாராயண் சென், தினேஷ் ஓஜா, பிரேம் சிங் ஜகத், யதீந்திர பிரகாஷ் மற்றும் தினேஷ் சிங் தாக்கூர் ஆகிய 5 பேரும் 50 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள். ஆகஸ்ட் 21ஆம் தேதி ராய்ப்பூரில் இருந்து புறப்பட்ட அவர்கள், மறுநாள் நேபாளம் சென்றுள்ளனர். கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து பசுபதிநாத் கோயில், மனகாமனா கோயில் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட திட்டமிட்டிருந்தனர்.
ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை 9.30 முதல் 10 மணியளவில் தாதிங் மாவட்டத்தின் மாலேகுவில் உள்ள ஒரு ஹோட்டலில் டீ குடிப்பதற்காக அவர்கள் காரை நிறுத்தினர். அப்போது முன்னால் இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் tea குடித்த அந்த ஹோட்டல் இந்தியர் ஒருவருக்குச் சொந்தமானது என்றும், அவர் உணவு வழங்கி தங்களுக்கு உதவியதாகவும் நாராயண் சென் தெரிவித்தார்.
இதற்கிடையே, திரிசூலி ஆற்றில் பெருக்கெடுத்த பயங்கர வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்படுவதையும், உடல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடித்துச் செல்லப்படுவதையும் அவர்கள் நேரில் பார்த்தனர். இதனால் அச்சமடைந்த 5 பேரும் மாலேகுவில் உயரமான பகுதியில் தஞ்சமடைந்து, காரிலேயே இரவை கழித்துள்ளனர்.
தாக்கூர் கூறுகையில், வெள்ளம் ஏற்பட்டபோது அவர்கள் பசுபதிநாத் கோயிலில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் இருந்ததாக தெரிவித்தார். பின்னர் திரிசூலி ஆற்றங்கரைக்குச் சென்று வெள்ள பாதிப்பை பார்த்தபோது, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்றார்.
மின்சாரம், குடிநீர் இல்லாத நிலையிலும் உள்ளூர் நிர்வாகமும் போலீஸாரும் தங்களுக்கு உதவியதாகவும், இந்திய அரசின் உதவி எண்ணைப் பயன்படுத்தி குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்ததாகவும் அவர் கூறினார். மேலும், கடவுளின் அருள் தங்களை காப்பாற்றியதாக நம்புவதாகவும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 28ஆம் தேதி நேபாளத்தில் இருந்து புறப்பட்ட 5 பேரும் சனிக்கிழமை வீடு திரும்பினர். அங்கு பணியில் இருந்த பெண் பாதுகாப்புப் பணியாளர்கள் அவர்களின் கைகளில் ராக்கி கட்டிய தருணம் தங்களுக்கு மிகுந்த ஆறுதலை அளித்ததாக தாக்கூர் தெரிவித்தார்.
வெள்ளத்துக்குப் பிறகு பலர், காணாமல் போன உறவினர்களைத் தேடி அலைந்த காட்சிகளை ஒருபோதும் மறக்க முடியாது என தினேஷ் ஓஜா கூறினார். காரில் தூங்கியபோதும், மீண்டும் வெள்ளம் வருமோ என்ற அச்சத்தால் உண்மையில் தூங்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருப்பது இச்சம்பவம் அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

