கைது செய்யப்பட்ட அமைச்சர்கள் 30 நாட்களில் பதவி நீக்க மசோதா.. A to Z ஓர் அலசல்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டுவந்த 130வது சட்டத்திருத்த மசோதா, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விரிவான செய்திகளை இந்தக் கட்டுரை தருகிறது.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டுவந்த 130வது சட்டத்திருத்த மசோதா நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதா இப்போது நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
என்ன மசோதா?
இந்திய அரசமைப்பில் மத்திய மற்றும் மாநில அளவில் அமைச்சர்கள் குழுவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவு 75,164 மற்றும் 239AA பிரிவுகளைத் திருத்த இந்த புதிய மசோதா முயல்கிறது. அதன்படி, நாட்டின் பிரதமர், முதலமைச்சர் அல்லது மத்திய, மாநில அமைச்சர்கள் யாரவது 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி 30 நாட்களுக்குள் பிணையில் வெளியே வராமல் தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால் 31வது நாள் அவர்களின் பதவி பறிக்கப்பட்டுவிடும் என்பதே இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கியமான விஷயம்.
இதில் 75 ஆவது பிரிவில் மேற்கொள்ள வேண்டி குறிப்பிட்டுள்ள திருத்தத்தின் படி, மத்திய அமைச்சர் ஒருவர் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால் 31 வது நாள் அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி குடியரசு தலைவரிடம் பிரதமர் பரிந்துரை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் 31 வது நாள் அந்த அமைச்சரின் பதவி நீக்கப்படும்.
அதேபோல ஒரு பிரதமர் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால் 31 வது நாள் அந்த பிரதமர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் அப்படி செய்யாவிட்டால் 31 வது நாள் அந்த பிரதமர் தானாகவே பதவியில் இருந்து விலகியதாக கருதப்படுவார்.
பிரிவு 164 இன் படி, ஒரு மாநில அமைச்சர் ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால் 31 வது நாள் அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆளுநரிடம் மாநில முதல்வர் பரிந்துரை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் 31 வது நாள் அந்த அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டவராக கருதப்படுவார்.
மேலும் மாநில முதல்வர் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால் 31 வது நாள் அந்த முதல்வர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும் அப்படி செய்யாவிட்டால் 31 வது நாள் அந்த முதல்வர் தானாகவே பதவியில் இருந்து நீக்கப்படுவார்.
இதுதவிர சட்டப்பிரிவு 239AA ஐ திருத்தி தேசிய தலைநகர் டெல்லிக்கும் இதே போன்ற விதிகளை கொண்டுவரவும் இந்த மசோதா முயல்கிறது.
ஆனால் அதேநேரம் அப்படி தகுதிநீக்கம் செய்யப்பட்ட பிரதமர், முதல்வர் ஆகியோர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு மீண்டும் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதை இந்த மசோதா தடுக்கவில்லை.
தற்போதைய சட்டம் என்ன?
இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 ன் படி, ஒரு குற்றவியல் வழக்கில் தண்டிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும், தண்டனைக் காலத்திற்கும் அதன் பிறகு ஆறு ஆண்டுகளுக்கும் நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினராக இருக்க தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று கூறுகிறது.
அதேநேரம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8(4), பாராளுமன்றம் அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினர் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டால், அத்தகைய தகுதி நீக்கம் நடைமுறைக்கு வராது என்று கூறுகிறது. இருப்பினும் 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் லில்லி தாமஸ் வழக்கின் போது இந்த பிரிவு குறித்து விளக்கம் கொடுத்துள்ளது.
அதாவது நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதை மட்டுமே குறிக்கிறது என்றும், அமைச்சராக இருப்பதற்கு அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சர்ச்சை என்ன?
தற்போது உள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மூலம் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு மட்டுமே நடைமுறைக்கு வரும். ஆனால் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள மசோதா மூலம் ஒரு நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பாகவே குற்றச்சாட்டின் அடிப்படையில் 30 நாட்கள் சிறையில் இருந்தாலே அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
இதனால் மத்தியில் ஆளும் அரசு எதிர்க்கட்சிகள் இருக்கும் மாநிலங்களவை அமைச்சர்கள் அல்லது முதல்வர்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் மூலம் ஏதாவது ஒரு புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டு அவர்களை எளிதில் பதவியில் இருந்து நீக்க முடியும். இப்படி செய்வதன் மூலம் இந்த திருத்தம் தவறாக பயன்படுத்தப்படவே அதிக வாய்ப்புள்ளது என எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றனர். டெல்லி முதல்வர் முன்னாள் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி போன்றோரின் வழக்குகளையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் “இந்த 130-வது அரசியல் சட்டத் திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல, இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கொடுஞ்சட்டம். 30 நாள் கைது என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை எந்த விசாரணையும், நீதிமன்றத் தண்டிப்பும் இல்லாமலேயே பதவி நீக்கம் செய்யலாம். மக்களாட்சியின் வேரிலேயே வெந்நீர் ஊற்றும் இத்தகைய திருத்தச் சட்டத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற முயலும் இந்த முயற்சிக்கு எதிராக ஜனநாயகச் சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வர அழைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்."
மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வாக்குதிருட்டு நடைபெற்றதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டை திசை திருப்பவே இந்த சட்ட திருத்த நடவடிக்கையை பாஜக மேற்கொண்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் , மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்றோரும் கூறியுள்ளனர்.
பாஜக விளக்கம்:
இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் பேட்டி கொடுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒரு முதலமைச்சர், பிரதமர் அல்லது வேறு எந்தத் தலைவரும் சிறையில் இருந்து நாட்டை நடத்த முடியுமா? அது நமது ஜனநாயகத்தின் கண்ணியத்திற்கு ஏற்றதா? இன்றும் கூட, அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தால், சிறையில் இருந்தே அரசாங்கத்தை அமைப்பார்கள். சிறை முதல்வர் இல்லமாகவோ அல்லது பிரதமர் இல்லமாகவோ மாற்றப்படும், மேலும் உயர் அதிகாரிகள் சிறையில் இருந்து உத்தரவுகளைப் பெறுவார்கள். நானும் எனது கட்சியும் இந்த யோசனையை முற்றிலுமாக நிராகரிக்கிறோம் என்று கடுமையாக சாடினார்.
இது தொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு பேட்டி கொடுத்த மத்திய அரசு நிர்வாகிகள் சிலர், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறை சென்றபோது பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவித்த சமயத்திலேயே மத்திய அரசு வட்டாரத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதித்ததாகவும் அப்போது முயற்சிகள் மேற்கொண்டு இருந்தால் அது அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்பட்டு இருக்கும், இப்போது மக்களே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தீர்ப்பை கொடுத்து விட்டனர் இதனால் இப்போது எந்த தடங்களும் இன்றி இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
குற்றப் பின்னணி
ஜனநாயக சீர்திருத்த அமைப்பின் (ADR) அறிக்கைகள், 46% எம்.பி.க்கள் மற்றும் 45% எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகக் கூறுகின்றன. குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு 15.4% ஆகவும், சுத்தமான பின்னணி கொண்ட வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு 4.4% ஆக இருப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு, தேர்தல் ஆணையம், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்திற்காக நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நபர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்யும் வகையில், மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய பரிந்துரைத்தது.
இவற்றை மையப்படுத்தியே இந்த திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாஜக தரப்பில் குறிப்பிட்டாலும் இந்த மசோதா காரணத்தை விட விளைவையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று எதிர் தரப்பினர் வாதிடுகின்றனர்.
பாஜகவின் பலம்
அரசமைப்பில் இந்த திருத்தத்தை பாஜக மேற்கொள்ள வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அக்கட்சிக்கு 3 இல் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும். தற்போது மக்களவையில் இருக்கும் 543 உறுப்பினர்களில் 361 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் மக்களவையில் பாஜகவின் பலம் 293 என்கிற அளவிலேயே இருக்கிறது. மாநிலங்களவையை பொறுத்தவரை மொத்தமுள்ள 239 உறுப்பினர்களில் 160 உறுப்பினர்களின் ஆதரவு தேவை எனும் நிலையில் பாஜகவுக்கு 132 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது. இதனால் தற்போதைய நிலையில் இந்த சட்ட திருத்தத்தை பாஜகவால் மேற்கொள்ள முடியாது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த மசோதா தற்போது 31 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கூட்டுக்குழுவின் அறிக்கை அடுத்த நாடாளுமன்ற கூட்ட தொடரின் போது சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அப்போது மீண்டும் இது தொடர்பான விவாதம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.