மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, இன்று (ஜன.31) மால்டாவில் பாதயாத்திரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து தனித்து நின்று களம் காண்போம். பாஜகவை வீழ்த்தும் வலிமையுள்ள கட்சி ஒன்று உள்ளது என்றால் அது திரிணாமுல் காங்கிரஸ்தான். தேர்தல் நேரத்தில் மட்டுமே குரல் எழுப்புவது சில கட்சிகளின் வாடிக்கையாக உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவை வலுப்படுத்த காங்கிரஸ் சிபிஐ(எம்) உடன் இணைந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் எந்தக் கட்சியுடனும் இணையவில்லை. எனினும், திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத்தில் பாஜகவை அரசியல்ரீதியாக எதிர்த்துப் போராடும் திறன்கொண்டது.
சட்டசபையில் ஒரு இடம் கூட இல்லாத நிலையிலும், மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு இரண்டு எம்.பி. சீட் தருவதாக கூறினோம். அத்துடன் அவர்களுடைய வெற்றிக்கு உதவுவதாகவும் சொன்னோம். அவர்கள் எங்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். தங்களுக்கு அதிக இடங்கள் வேண்டும் எனக் கேட்டனர். இதனால் அவர்களது கோரிக்கையை நிராகரித்தோம். அதன்காரணமாகவே தொகுதிப் பங்கீட்டு பிரச்னை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மேற்குவங்கத்தில் ஒரு சீட் கூட கொடுக்க முடியாது. திரிணாமுல் காங்கிரஸ் இன்னும் i-n-d-i-a கூட்டணியிலேயே உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “மாநிலத்தின் அனைத்து நிலுவைத் தொகைகளையும் வசூலிக்க பிப்ரவரி 1ஆம் தேதிவரை நான் மத்திய அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளேன், இல்லையெனில் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் தர்ணா நடத்துவேன். நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்றால், அதை எவ்வாறு பெறுவது என்பது எனக்குத் தெரியும்” என்றார்.